

ஆவடியை அடுத்த பாக்கம் கிராமத்தில் உள்ள இருளர்கள், வரவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக தீர்மானமிட்டுள்ளனர்.
இப்பகுதியில் இருளர்கள் சமுதாயத்தினர் சில பத்தாண்டுகளுக்கு முன்பு குடியமர்ந்தாலும் இன்னும் மின்சாரம், மற்றும் அடிப்படை வசதிகள் இவர்களுக்கு அளிக்கப்படவில்லை. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரவில் படிக்க தெரு விளக்குகளையே நம்பியிருக்கும் அவல நிலைமை நீடித்து வருகிறது.
திருநின்றவூர்-பெரியபாளையம் மெயின் ரோட்டில், திருவள்ளூர் மாவட்டத்தின் ஒருபகுதியான ஸ்ரீபதி நகரில் நிர்வாகிகளால் இருளர்கள் மறுகுடியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கு நிலப்பட்டாக்கள், கான்க்ரீட் சாலை, மின்சார வசதி, குடிநீர் வசதி மற்றும் அரசு திட்டங்களில் இவர்கள் பெயரையும் சேர்ப்பது குறித்து வாக்குறுதி அளித்ததாக இருளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் எந்த ஒரு வாக்குறுதியும் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்கின்றனர் இவர்கள்.
இதன் விளைவாக இருளர்கள் அமைப்பு சமீபத்தில் நடத்திய கூட்டத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை புறக்கணிக்க தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். மேலும், எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இவர்கள் தங்கள் குடிசைகளில் கருப்புக் கொடியைப் பறக்க விட்டுள்ளனர். திருவள்ளூரில் சுமார் 80,000 இருளர் சமுதாய வாக்காளர்கள் உள்ளனர்.
இது குறித்து திருவள்ளூர் மாவட்ட இருளர் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனர் ஆர்.பிரபு கூறும்போது, “எங்கள் குழந்தைகள் மெழுகுவர்த்தி மற்றும் தெரு விளக்கு ஒளியில் படித்து வருகின்றனர். எங்கள் வீடுகள் இயற்கைப் பேரழிவுகளிலிருந்து காத்துக் கொள்ளும் தன்மை அற்றது. இத்தனையாண்டுகளாக நாங்கள் வெறும் வாக்குறுதிகளை மட்டுமே பெற்று வருகிறோம்” என்றார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திருவள்ளூரின் பல்வேறு பகுதியைச் சேர்ந்த இருளர்கள் இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் செய்தனர். இருளர் சமுதாய மூத்தோரும் இது தொடர்பாக ஏகப்பட்ட மனுக்களை அரசாங்கத்திடம் அளித்தனர்.
ஆனால், “எங்கள் துயரங்களை திருவள்ளூர் நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை, இத்தனையாண்டுகளாக எங்கள் வாழ்க்கைத் தரத்தில் எந்த வித முன்னேற்றமும் ஏற்படவில்லை, எனவே தேர்தலைப் புறக்கணிக்க முடிவெடுத்தோம்” என்று ஸ்ரீபதி நகரைச் சேர்ந்த ஆர்.சரவணன் என்பவர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் புறநகர்ப்பகுதிகளுக்கு இருளர்கள் 20-ம் நூற்றாண்டின் தொடக்க காலக்கட்டங்களில் புலம் பெயர்ந்தனர். இவர்களது மரபுத் தொழிலான பாம்ப் பிடித்தல் மற்றும் மரம் வெட்டுதல் ஆகியவை தடைசெய்யப்பட்டதையடுத்து இருளர்களில் பெரும்பாலானோர் தற்போது வேளாண் கூலிகளாகவும், அரிசி மில்களில் சுமைதூக்கிகளாகவும் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.