Published : 26 Feb 2022 07:04 AM
Last Updated : 26 Feb 2022 07:04 AM

பணிநிரந்தரம் செய்யக் கோரி 2-வது நாளாக பகுதி நேர சிறப்பு ஆசிரியர் காத்திருப்பு போராட்டம்: டிபிஐ வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்

சென்னை: பணிநிரந்தரம் செய்யக்கோரி பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் நேற்று 2-வது நாளாக சென்னை டிபிஐ வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். அதில் பங்கேற்ற பலர் முதல் இரவு அந்த வளாகத்திலேயே தரையில் படுத்து உறங்கினர்.

தமிழகம் முழுவதும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள் (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிந்து வருகிறார்கள்.

வாரத்தில் மூன்று அரை நாட்கள் வீதம் பணியாற்றும் அவர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வருகிறார்கள்.

இந்த நிலையில், பணிநிரந்தர கோரிக்கையை வலியுறுத்தி காலவறையற்ற காத்திருப்பு போராட்டத்தை சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று முன்தினம் (வியாழக்கிழமை) தொடங்கினர். இதில் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பெண்கள் குடும்பத்தினரோடு வந்திருந்தனர்.

இந்நிலையில் அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்ட (எஸ்எஸ்ஏ) இயக்குநர் போராட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தார். ஆனால், பணிநிரந்தரம் தொடர்பான அறிவிப்பை முதல்வர் வெளியிடும் வரை போராட்டத்தை தொடரப் போவதாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துவிட்டனர். போராட்டத்தில் பங்கேற்க வரும் சிறப்பு ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் டிபிஐ வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களில் பலர் டிபிஐ வளாகத்திலேயே தரையில் படுத்து தூங்கினர். அவர்களின் போராட்டம் 2-வது நாளாக நேற்றும் தொடர்ந்தது. 2-வது நாளிலும் பெண்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மதியம் 12 மணியளவில் கட்டிடத்தின் முன்பு கடும் வெயிலில் தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர். தொடர்ந்து கோரிக்கையை நிறைவேற்றக் கோரி கோஷம் எழுப்பினர்.

முன்னெச்சரிக்கையாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலரிடமிருந்து அழைப்பு வந்திருப்பதாக போராட்டக் குழுவினரிடம் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதைத்தொடர்ந்து பாடவாரியாக ஒருவர் வீதம் 5 பேர் குழு அமைக்கப்பட்டு அவர்கள் பள்ளிக்கல்வித் துறை செயலரிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக தலைமைச் செயலகத்துக்கு புறப்பட்டுச் சென்றனர். ``பணிநிரந்தரம் என்ற ஒற்றை அறிவிப்பு வரும்வரை எங்களின் காத்திருப்பு போராட்டம் தொடரும்'' என்று சங்க நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x