Published : 26 Feb 2022 07:37 AM
Last Updated : 26 Feb 2022 07:37 AM

சென்னை மியாட் மருத்துவமனையில் மறுவாழ்வு மையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு மையத்தை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் நேற்று திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். உடன், மருத்துவமனை நிர்வாக இயக்குநர் பிரித்வி மோகன்தாஸ்.

சென்னை: சென்னை கிண்டி அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள ‘மியாட் மறுவாழ்வு மையம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த மறுவாழ்வு மையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

மேலும், மையத்தின் செயல்பாடுகள், தொழில்நுட்ப வசதிகள் குறித்து மருத்துவமனை நிர்வாகஇயக்குநர் பிரித்வி மோகன்தாஸிடம் முதல்வர் கேட்டறிந்தார்.

அதேநேரத்தில், மியாட் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்று, மையத்தைப் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் பங்கேற்றனர்.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரித்வி மோகன்தாஸ் கூறும்போது, "கரோனா தொற்று காலத்தில் 500 படுக்கைகளுடன் கூடிய பிரத்யேக பிரிவை அமைத்து, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரைகுணப்படுத்தியுள்ளோம்.

கரோனாவைப் பொறுத்தவரை தற்போது 80 சதவீதம் பேருக்கு லேசான பாதிப்பு ஏற்படுகிறது. 15 சதவீதம் பேருக்கு தீவிர அறிகுறிகள் உள்ளன. 5 சதவீதம் பேர் மட்டுமே கடும் பாதிப்புக்கு உள்ளாகி, தீவிர சிகிச்சை பெறும் நிலைக்குச் செல்கின்றனர்.

கடும் தாக்கத்துக்கு உள்ளாகும் நபர்கள் கரோனாவிலிருந்து குணமடைந்தாலும், அதனால் ஏற்பட்ட எதிர்விளைவுகள் குறைவதில்லை. குறிப்பாக, நுரையீரல் பாதிப்பு, நரம்பு சார் பிரச்னைகள், இதயம், கல்லீரல், சிறுநீரகப் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனால்,அவர்களது இயல்பு வாழ்க்கைபாதிக்கிறது. அதைக் கருத்தில்கொண்டு, அத்தகைய நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்பதற்காக இந்த மையத்தைத் தொடங்கியுள்ளோம்.

நுரையீரல் சீராக்கம், இயன்முறை சிகிச்சை, தொழில்முறை சிகிச்சை, இதய சீராக்க சிகிச்சை, நரம்பு பாதிப்புகளுக்கான கண்காணிப்பு, நடுக்குவாத சிகிச்சைகள் உட்பட பல்வேறு சிகிச்சைகள் இங்கு அளிக்கப்படுகின்றன. இதற்காக மருத்துவ நிபுணர்களை உள்ளடக்கிய 12 பேர் கொண்ட சிறப்பு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x