

சென்னை: முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைது விவகாரத்தில், மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக அவரது மகனும், முன்னாள் எம்பி.யுமான ஜெயவர்த்தன், மாநில மனிதஉரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் வீட்டுக்குள் கடந்த 21-ம் தேதி நுழைந்த போலீஸார், எனது தந்தையை கைதுசெய்வதாகக் கூறி அவரை போலீஸ் வேனில் ஏறும்படி கூறினர். கைதுக்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இரவு நேரத்தில் குழந்தைகள், பெண்கள் வீட்டில் இருக்கும் நிலையில் போலீஸார் வீட்டுக்குள் நுழைவது சட்ட விரோதமானது. லுங்கியுடன் இருந்த எனது தந்தை வேஷ்டிஅணிந்து வருவதாகக் கூறியதையும் போலீஸார் ஏற்கவில்லை.
எனது தந்தைக்கு சர்க்கரை உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் உள்ளன. இதற்கான மருந்துகளை எடுத்து செல்வதற்கும் போலீஸார் அனுமதிக்கவில்லை. எனது தந்தையை போலீஸார் எங்கு அழைத்து சென்றனர் என்பதுகூட எங்களுக்குத் தெரியவில்லை.
எனது தந்தை முன்னாள் சட்டப்பேரவைத் தலைவர் என்பதால் அவருக்கு சிறையில் முதல் வகுப்புதர வேண்டும் என்ற கோரிக்கையை மாஜிஸ்திரேட் ஏற்றுக்கொண்டபோதும், முதல் வகுப்பு இல்லாத சிறையான பூந்தமல்லி சிறையில் அடைத்தனர். எனது தந்தை கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதேபோன்று தாக்குதலுக்கு உள்ளான திமுக பிரமுகர் நரேஷ்குமாரும், ‘தனது சட்டையை கழற்றிஇழுத்துச் சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்’என்று மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.