Published : 26 Feb 2022 08:04 AM
Last Updated : 26 Feb 2022 08:04 AM

குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து நடந்தபோது சில விநாடிகளில் திடீரென உருவான மேகக் கூட்டங்களால் காட்சி தெளிவின்மை: இந்திய வானிலை ஆய்வு மையம்

சென்னை: குன்னூரில் கடந்த டிசம்பர் மாதம் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான நேரத்தில், காற்றின் அதிக ஈரப்பதம் காரணமாக தாழ்வான உயரத்தில் திடீரென மேகக் கூட்டங்கள் உருவாகி காட்சியில் தெளிவின்மையை ஏற்படுத்தியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குன்னூர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் கடந்த டிச.8-ம் தேதி விமானப் படைக்கு சொந்தமான எம்ஐ-17 வி5 ரக ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த முப்படை தளபதி பிபின்ராவத், அவரது மனைவி மதுலிகாஉட்பட 13 பேர் உயிரிழந்தனர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட குரூப்கேப்டன் வருண் சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை 6,600 மணி நேரத்துக்கு மேல் இயக்கிய அனுபவம் வாய்ந்த ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய உயர்நிலை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதற்கிடையே, தமிழக காவல்துறை சார்பிலும் சிறப்பு குழுஅமைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த குழு, ஹெலிகாப்டர் விபத்து நடந்த நேரத்தில் குன்னூர் பள்ளத்தாக்கு பகுதியில் நிலவிய வானிலை நிலவரம், செயற்கைக் கோள் புகைப்படங்கள் குறித்த விவரங்களை இந்திய வானிலை ஆய்வு மையத்திடம் கேட்டிருந்தது.

அதன்படி, தமிழக காவல் துறைக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அளித்த அறிக்கை விவரங்கள் வெளியாகியுள்ளன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: டிச.8-ம் தேதி குன்னூர் பள்ளத்தாக்கின் கீழ் பகுதியில் காற்றின் ஈரப்பதம் அதிகமாக இருந்தது. அப்போது 8 முதல் 16 கி.மீ. வேகத்தில் கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி, அதாவது மேற்குத் தொடர்ச்சி மலையின் கீழ் பகுதியில் இருந்து மேல் பகுதி நோக்கி காற்று வீசியது.

இதனால், திடீரென சில விநாடிகளில் 1,400 முதல் 1,600மீட்டர் வரையிலான குறைந்த உயரத்தில் தொடர்ந்து மேகக்கூட்டங்கள் உருவாகி வந்துள்ளன. இந்த மேகக் கூட்டங்களால் காட்சியில் தெளிவின்மை ஏற்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. அப்போது அப்பகுதியில் லேசான மழையும் செய்துள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், மோசமான வானிலை காரணமாக காட்சியில் தெளிவின்மை ஏற்பட்டதால் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என தமிழக போலீஸார் ஆய்வில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x