

திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் பதவி அல்லது பழநி நகராட்சி துணைத் தலைவர் பதவியை திமுக தலைமையிடம் கேட்டுப்பெற மார்க்சிஸ்ட் கட்சி முயற்சியில் இறங்கியுள்ளது.
திண்டுக்கல் மாநகராட்சி, பழநி, கொடைக்கானல், ஒட்டன் சத்திரம் நகராட்சிகள் மற்றும் 23 பேரூராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளை திமுக கைப்பற்றியது. அடுத்தகட்டமாக மார்ச் 2-ம் தேதி கவுன்சிலர்கள் பதவியேற்புக்குப் பிறகு மார்ச் 4-ம் தேதி திண் டுக்கல் மாநகராட்சியில் மேயர், துணை மேயர் தேர்தல், நகராட்சி, பேரூராட்சிகளில் தலைவர், துணைத் தலைவர் தேர்வு நடை பெறவுள்ளது.
இதற்காக திமுக தரப்பில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளை யாருக்குக் கொடுக்கலாம் என்ற பட்டியலுடன் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, அர.சக்கரபாணி ஆகியோர் சென் னை சென்று கட்சித் தலைமையிடம் பட்டியலை வழங்கியுள்ளனர்.
திண்டுக்கல் மேயர் மற்றும் பழநி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் பதவிகள் திமுகவினருக்கே கிடைக்கும்.
கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு சில இடங்களில் துணைத்தலைவர் பதவிகளை ஒதுக்கீடு செய்ய கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளன. அதன்படி திண் டுக்கல் மாநகராட்சி துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிடம் கேட்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
கடந்த முறை திண்டுக்கல் நகராட்சியாக இருந்தபோது துணைத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த கல் யாணசுந்தரம் வகித்தார். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட் டியிட்ட மார்க்சிஸ்ட் கட்சி தோல் வியடைந்தது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வரை பதவியில் அமர்த்த அந்த கட்சியின் தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற் கெனவே முன்மாதிரியாக நகராட்சித் துணைத் தலைவர் பதவியில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர் இருந்ததால் தற்போது துணை மேயர் பதவியை திமுக தலைமையிடம் கேட்டுப் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்படி கிடைக்கும்பட்சத்தில் கணேசன், மாரியம்மாள், ஜோதி பாசு ஆகியோரில் ஒருவர் துணை மேயராக வாய்ப்பு உள்ளது.
இல்லையென்றால் பழநி நகராட்சி துணைத் தலைவர் பதவியையாவது பெற வேண்டும் என்ற முயற்சியில் மார்க்சிஸ்ட் கட்சி இறங்கியுள்ளது. இரண்டில் ஏதேனும் ஒன்றைப் பெறுவோம் என திண்டுக்கல் மார்க்சிஸ்ட் கட்சியினர் தெரிவிக்கின்றனர்.