பண பலத்தை மீறி ம.ந. கூட்டணி வெற்றி பெறும்: குமரியில் வைகோ நம்பிக்கை

பண பலத்தை மீறி ம.ந. கூட்டணி வெற்றி பெறும்: குமரியில் வைகோ நம்பிக்கை
Updated on
1 min read

`தேர்தலில் பண பலத்தை மீறி தேமுதிக, தமாகா, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும்’ என வைகோ நம்பிக்கை தெரிவித்தார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மார்த்தாண்டம், கருங்கல், குளச்சல், அழகியமண்டபம், நாகர்கோவில் ஆகிய இடங்களில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலை பிரச்சாரம் செய்தார்.

மார்த்தாண்டத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழக அரசியலில் அந்த காலத்தில் ஆரோக்கியமான தேர்தல் போட்டி இருந்தது. அப்போது வெற்றி, தோல்வியை பணம் நிர்ணயித்ததில்லை. ஜனநாயகம் மேலோங்கியிருந்தது. இன்று தமிழகமே நரகப் படுகுழியில் தள்ளப்பட்டுள்ளது. பணம்தான் தேர்தல் முடிவை தீர்மானிக்கும் என்ற நிலையை திமுகவும், அதிமுகவும் கொண்டு வந்துள்ளன. திருமங்கலம் பார்மூலாவின் ஆதிக்கம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இருந்தது. தற்போது தேர்தலை முன்வைத்து திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு போனாலே ரூ. 1000-க்கு குறையாமல் அன்பளிப்பு கொடுக்கின்றனர்.

போலீஸிடம் பணம் பட்டுவாடா குறித்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதை மறந்துவிட்டு, பாதுகாப்பு அளிப்பதில் கவனமாக இருக்கின்றனர். ஜவுளி கடை, பாத்திர கடைகளின் மூலம் அன்பளிப்பு கொடுக்க டோக்கன் முறையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பணபலத்தையும் மீறி தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி வெற்றி பெறும்.

எங்கள் வெற்றி பல ஆண்டுகள் விவாதிக்கப்படும் தேர்தல் முடிவாக இருக்கும். தமிழகத்தில் 1 கோடி புதிய வாக்காளர்கள் உள்ளனர். இதில் 50 சதவீதம் பேர் எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக உள்ளனர். இன்னும் 15 நாட்களில் இவர்களின் ஆதரவு 80 சதவீதமாக அதிகரிக்கும்’ என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in