

தமிழகம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்கள் என இதுவரை மொத்தம் ரூ.21 கோடியே 31 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக மாநில தலைமைத் தேர்தல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த 7-ம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெற்ற சோதனையில் ரூ.15 லட்சத்து 51 ஆயிரம் ரொக்கம், 38 கிலோ வெள்ளிப் பொருட்கள், 49 காஸ் அடுப்புகள், மது வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
8-ம் தேதி நடைபெற்ற சோதனையில் ரூ.62 லட்சம் ரொக்கம், 1500 கைக்கடிகாரங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் போஸ் டர்கள் ஒட்டியது, கட்சிக் கொடிகளை அகற்றாதது என பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் விதிகளை மீறி சுவர் விளம்பரம் செய்தது, போஸ்டர் ஒட்டியது, பேனர் அமைத்தது போன்றவை தொடர்பாக இதுவரை 2 லட்சத்து 90 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டு, 2 லட்சத்து 81 ஆயிரம் புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. அதே போல இதுவரை ரூ.21 கோடியே 31 லட்சம் மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.