தூத்துக்குடியில் திமுக நிர்வாகி கொலை: வியாபாரிகள் கடையடைப்பு, மறியல் போராட்டம்
தூத்துக்குடியில் திமுக நிர்வாகி கொலை செய்யப்பட்டார். இதனைக்கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு மற்றும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி பாலதண்டாயுத நகரைச் சேர்ந்தவர் கண்ணன்(49). டெய்லரான இவர், தாளமுத்துநகர் பிரதான சாலையில் தையல் கடை நடத்தி வந்தார். அந்த பகுதி திமுக கிளைச் செயலாளராகவும் பணியாற்றி வந்தார்.
கடந்த சில மாதங்களுக்கு முன் கண்ணனின் சகோதரர் பாலசுப்பிரமணியன் என்பவரின் மாமியார் இறந்ததையொட்டி, 16-ம் நாள் நிகழ்ச்சி அந்த பகுதியில் நடந்துள்ளது. அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன் ஜெயேந்திரன், முத்துப்பாண்டி மகன் ரமேஷ் கண்ணன் மற்றும் ஒருவர் என, 3 பேர் மோட்டார் சைக்கிளில் வேகமாகச் சென்றுள்ளனர். இதனை கண்ணன் மற்றும் உறவினர்கள் கண்டித்துள்ளனர். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலையில் கண்ணனின் மகள், சக பள்ளி மாணவியருடன் பள்ளி முடிந்த பிறகு மணிகண்டன் என்பவரின் ஆட்டோவில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.
பாலதண்டாயுத நகர் சக்தி விநாயகர் கோயில் அருகே வந்தபோது, ஜெயேந்திரன் உள்ளிட்ட 3 பேரும் ஆட்டோவை மறித்து தகராறு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், கண்ணன் ஆகியோர் சக்திவிநாயகர் கோயில்அருகே நின்று கொண்டிருந்த அந்த 3 பேரையும் சந்தித்து கண்டித்துள்ளனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. போலீஸில் புகார் கொடுக்குமாறு மணிகண்டனிடம் கண்ணன் கூறியுள்ளார். அதன்பேரில் மணிகண்டன், அவர்கள் மூவர் மீதும்தாளமுத்துநகர் போலீஸில் புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த 3 பேரும், நேற்று முன்தினம் இரவு தனது கடையில் இருந்த கண்ணனை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர். காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்.
இச்சம்பவத்தை கண்டித்து நேற்று காலையில் தாளமுத்துநகர் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி வியாபாரிகள் மற்றும் கண்ணனின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில் ஜெயேந்திரன், ரமேஷ் கண்ணன் ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீஸார் கைது செய்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
