Published : 26 Feb 2022 08:02 AM
Last Updated : 26 Feb 2022 08:02 AM

யுத்தம் நடைபெறும் உக்ரைன் நாட்டில் உணவின்றி தவிப்பதாக மருத்துவ மாணவர்கள் வேதனை: தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருவண்ணாமலை

உக்ரைன் நாட்டில் உணவின்றி தவிக்கும் தங்களை இந்தியா அழைத்து வருவதற்கு பிரதமர் மற்றும் முதல்வர் ஆகியோர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவம் படிக்க சென்ற தமிழக மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் நேற்றும் 2-வது நாளாக நீடித்தது. இதன் தாக்கம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனால், உக்ரைன் நாட்டில் பல்வேறு பகுதிகளில் மருத்துவம் படிக்க சென்றுள்ள தமிழக மாணவர்கள், உயிருக்கு ஆபத்தான நிலையில் தவித்து வருகின்றனர். விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் அனைவரும் நாடு திரும்புவதில் சிக்கல் நீடிக்கிறது.

அவர்களில் ஒருவர், தி.மலை மாவட்டம் கலசப்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரகாஷ் மகன் தீபக். இவருடன், தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பேர் தங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் பல்கலைக் கழகத்தில் தங்கி உள்ளனர். அவர்களை, அவர்களது பெற்றோர் தொடர்பு கொண்டு பேசி வருகின்றனர். அப்போது அவர்கள், தங்களது நிலையை விளக்கி உள்ளனர். மேலும், இந்திய அரசு மற்றும் தமிழக அரசு துரித நடவடிக்கையை மேற்கொண்டு, இந்தியாவுக்கு பாதுகாப்பாக அழைத்து செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளுக்கு தீபக் உள்ளிட்ட மாணவர்கள் வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப் வீடியோவில், “உக்ரைன் நாட்டில் முதலாமாண்டு மருத்துவம் படித்து வருகிறேன். உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கவில்லை. தங்கு வதற்கு பாதுகாப்பான இடமும் வழங்கவில்லை.

இதே நிலை நீடித்தால் 2 அல்லது 3 நாட்கள் வரை சமாளிப்பது கடினம். உயிருக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. வெளியே என்ன நடக்கிறது என தெரியவில்லை. எங்களுக்கு எந்த தகவலும் கிடைப்பதில்லை. இந்திய அரசாங்கம் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு, எங்களை அழைத்து செல்ல வேண்டும்” என்றனர்.

இதேபோல், வந்தவாசியைச் சேர்ந்த மாணவர் மணிகண்டன் உள்ளிட்டவர்கள் வெளியிட்டுள்ள வாட்ஸ்-அப் வீடியோவில், “உக்ரைனில் உணவு கிடைக்கவில்லை. கடைகளில் உணவு பொருட்கள் தீர்ந்துவிட்டது. விமான சேவை ரத்தாகிவிட்டது. வீட்டுக்கு எப்படி செல்வது என தெரியவில்லை. அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது. பயமாக உள்ளது. பெற்றோரும் பயத்தில் உள்ளனர். தண்ணீர் கிடைக்கவில்லை. மின்சாரமும், எந்த நேரத்திலும் நிறுத்தப்படலாம் என கூறப்படுகிறது. பதுங்கு குழிக்கு செல்லுமாறு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இங்கு தமிழகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாண வர்கள் உள்ளனர். வந்தவாசி பகுதியைச் சேர்ந்த 10 மாணவர்கள் படித்து வருகிறோம். தூதரகம் மற்றும் பல்கலைக்கழகம் மூலம் உதவிகள் வழங்கப்படுகிறது. தூதரகத்திடம் பல்கலைக்கழக நிர்வாகம் பேசி வருகிறது. நாங்கள் அனைவரும், பாதுகாப்பாக நாடு திரும்புவதற்கு பிரதமர் மோடி மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x