

வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கான தேர்தல் முடிவுகளில் திமுக 44 வார்டுகளில் வெற்றிபெற்று தனிப் பெரும் பான்மையுடன் மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஓரிடத்திலும் மற்றும் அதிமுக 7, சுயேச்சைகள் 6, பாமக, பாஜக தலா ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இதையடுத்து, மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தலில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா வரும் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக, மாநகராட்சி அலுவலக கூட்டரங்கம் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேயர் மற்றும் துணை மேயர் அறைகளும் தயார் செய்யும் பணியில் மாநகராட்சி பொறியாளர்கள் குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
அதேபோல், மேயருக்கான வெள்ளி செங்கோலை புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதே போல், வேலூர் இந்தியன் வங்கி கிளை லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள 140 பவுன் எடையுள்ள தங்க சங்கிலியையும் தயார் செய்து வருகின்றனர்.
மேலும், மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் அணியக்கூடிய அங்கி கடந்த 2008-ம் ஆண்டு தைக்கப்பட்டது.
மேலும், கடந்த 5 ஆண்டுகளாக அவற்றை பயன்படுத்தாத நிலை உள்ளது. எனவே, புதிதாக பொறுப்பேற்க உள்ள மேயர் மற்றும் துணை மேயர் யார் என்பதற்கு ஏற்ற வகையில் புதிய அங்கியை தைக்கவும் திட்டுமிட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.