

புதுச்சேரி: ”புதுச்சேரி ஜிப்மர் கேந்திரிய வித்யாலயாவில் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பில் தமிழைப் புறக்கணித்து இந்தி மொழியறிவு கட்டாயம் என்ற அறிவிப்பு, அரசியல் சட்டப்படி தவறானது. தமிழ் மொழியறிவு தகுதி வேண்டும் என்ற திருத்தம் தராவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம்” என்று பாவேந்தர் பாரதிதாசன் பேரன் செல்வம் எச்சரித்துள்ளார்.
இதுபற்றி புதுச்சேரி சிந்தனையாளர் பேரவைத் தலைவரும், பாரதிதாசன் பேரனுமான செல்வம் கூறியது: "புதுச்சேரி ஜிப்மர் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இதில், வரும் மார்ச் 2-ஆம் தேதி தொடங்கி தற்காலிக ஆசிரியர்கள் பணித்தேர்வுக்கு அறிவிப்பு நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிநியமனத்திற்கு தகுதிகள் என்கிற வகையில் இந்தி மற்றும் ஆங்கில மொழியறிவு கட்டாயம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அரசியல் சட்டப்படி தவறானது.
இந்த தமிழ் மண்ணில் இங்குள்ளவர்களின் நிலத்தில் இயங்கும் பள்ளி இது. இங்கு உள்ள அனைத்து அரசு வசதிகளையும் பெற்று இந்த நிறுவனம் நடைபெற்று வருகிறது. இதில், வெளிமாநில மாணவர்களுக்கு சில இடங்கள் தந்தாலும் தமிழ்மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட மாணவர்கள் நிறைய பேர் பயில்கின்றனர். எனவே, தமிழ்மொழித் தகுதியை இந்த நிறுவனம் புறக்கணித்துள்ளது. இது உளவியல்படியும் தவறாகும். இதன் மூலம் இம்மாநில மக்களின் அனைத்து உரிமைகளையும் காலில் போட்டு நசுக்குகிறது.
மேலும், நமது ஊரின் பெயர் புதுச்சேரி. ஆனால் அறிவிப்பில் பாண்டிச்சேரி என உள்ளது. இது ஒன்றிய அரசின் விதிகளை மீறுவதாகும். இவ்விஷயத்தில் புதுச்சேரி அரசு தலையிட வேண்டும். உண்மையில் தமிழ்மொழி தகுதிதான் தேவை என்று திருத்த அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையெனில் தொடர் மறியல் போராட்டம் நடத்துவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.