Published : 23 Jun 2014 11:15 AM
Last Updated : 23 Jun 2014 11:15 AM

இதய வால்வு சுருங்கியதால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பலூன் சிகிச்சை: சென்னை ஜி.ஹெச். மருத்துவர்கள் சாதனை

இதய வால்வு சுருங்கியதால் கடந்த 4 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருந்த சிறுமிக்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை இல்லாமல் பலூன் முறையில் வால்வு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த ஆறுமுகம் காவேரி தம்பதியின் மகள் திவ்யா (14). நுங்கம்பாக்கம் அருகே உள்ள ஜெய்கோபால் கரோடியா பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 4 ஆண்டுகளாகவே சிறுமிக்கு தலைவலி, வாந்தி, மயக்கம் அடிக்கடி இருந்து வந்துள்ளது. தனியார் மருத்துவமனை மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் காண்பித்துள்ளனர்.

கடந்த மே 9-ம் தேதி சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிறுமி சேர்க்கப்பட்டார். அவரது இதயத்தின் இடது வால்வில் சுருக்கம் இருந்தது பரிசோதனை யில் கண்டுபிடிக்கப்பட்டது. சுருங்கிய வால்வை பலூன் மூலம் விரிவடையச் செய்யும் சிகிச்சை மே 21-ம் தேதி செய்யப்பட்டது. சிறுமி குணமடைந்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடத்தப்பட்டது. பலூன் முறையில் சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவமனை இதயத் துறை தலைவர் ரவி தலைமையிலான மருத்துவர்கள் முத்துக்குமார், ஜெபஸ்டீன்பால், மீனாட்சி, ரவிசங்கர், சாமிநாதன் ஆகியோர் கூறியதாவது:

சுருங்கிய இதய வால்வை சரிசெய்ய அறுவை சிகிச்சைதான் வழி என்ற நிலை இருந்தது. இதில் ரத்தம் அதிகம் வீணாகும். மயக்க மருந்துகளும் பயன்படுத்த வேண்டியிருக்கும். அறுவை சிகிச்சை முடிந்து 15 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அதிக செலவும் ஆகும்.

சுருங்கிய இதய வால்வை அறுவை சிகிச்சை இல்லாமல் பலூன் மூலம் விரிவடையச் செய்யும் சிகிச்சை, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் இதயவியல் பிரிவில் செய்யப் படுகிறது. 2012-ம் ஆண்டு முதல் சுமார் 200 நோயாளிகளுக்கு பலூன் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை சிறுமியின் சுருங்கிய இதய வால்வும் பலூன் முறையில்தான் விரிவுபடுத்தப்பட்டது.

‘ஷீத்’ எனப்படும் உறைக்குள் வைத்து மெல்லிய ஊசியானது சிறுமியின் வலது தொடை ரத்த நாளம் வழியாக உடலுக்குள் செலுத்தப்பட்டது. அதன் மூலம் இதய நடுதசையில் துளை போட்டு, சிறுமிக்காக பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்ட சிறிய அளவு பலூன் கருவியை எடுத்துச் சென்று இதயத்தின் இடப்பக்க சுருங்கிய வால்வு விரிவுபடுத்தப்பட்டது. இந்த சிகிச்சை ஒரு மணி நேரம் நடந்தது. சிறு வயதினருக்கு இந்த சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல் முறை.

அதிகமான சுற்றுச்சூழல் மாசுபாடு, போதிய காற்று வெளிச்சமின்றி நெருக்கடியான சூழலில் வாழ்வது போன்ற வைதான் இதய வால்வு சுருங்கு வதற்கு முக்கிய காரணங்கள். இதய வால்வில் சுருக்கம் இருந்தால் மூட்டு வலி, தொண்டை எரிச்சல் இருக்கும். அதிகமான காய்ச்சல் 2 வாரத்துக்கு மேல் இருக்கும். குறிப்பாக 9 முதல் 16 வயதினருக்கு இவை சற்று அதிகமாக இருக்கும். இத்தகைய அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

போலியோ போல, இதற்கும் தடுப்பு மருந்து அளிப்பது தொடர் பாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. இங்கு வரும் நோயாளிகளில் சராசரியாக 25% பேருக்கு இதய வால்வில் சுருக்கம் இருக்கிறது.

பலூன் சிகிச்சை அளித்த 24 மணி நேரத்தில் வீட்டுக்கு சென்றுவிடலாம். கர்ப்பிணி களுக்கு இந்த வகை பாதிப்பு ஏற்பட்டால், அறுவை சிகிச்சை இல்லாமலேயே சரிசெய்துவிட முடிகிறது. சிறுமி திவ்யாவுக்கு முதலமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டது. இதே சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் அளித்திருந் தால் ரூ.1.50 லட்சம் வரை செலவாகி இருக்கும்.

இவ்வாறு மருத்துவர்கள் கூறினர்.

சிகிச்சை பெற்ற சிறுமி திவ்யா கூறுகையில், ‘‘சிகிச்சை பெறும் முன்பு அடிக்கடி வாந்தி, காய்ச்சல், தலைவலி இருக்கும். கடந்த 3 ஆண்டுகளாக மிகவும் அவதிப்பட்டு வந்தேன். ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதல்வர் காப்பீடு திட்டம் மூலம் சிகிச்சை பெற்று நலமாக இருக்கிறேன். இப்போது வலி எதுவும் இல்லை. நலமாக இருக்கிறேன்’’ என்றார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x