கோடநாடு வழக்கில் விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல்: சிறப்பு வழக்கறிஞர் தகவல்

உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான சயான், வாளையாறு மனோஜ்.
உதகை நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான சயான், வாளையாறு மனோஜ்.
Updated on
1 min read

உதகை: கோடநாடு வழக்கில் விரைவில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்பு வழக்கறிஞர் ஷாஜகான் தெரிவித்துள்ளார்.

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் குற்றம்சாட்டப்பட்ட சயான், வாளையாறு மனோஜ் உட்பட 10 பேர் சேர்க்கபட்ட நிலையில், தற்போது விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் உறவினர் ரமேஷ் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில், சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் ஏற்கெனவே நிபந்தனை ஜாமீன் பெற்றுள்ள நிலையில், தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோரும் நிபந்தனை ஜாமீனில் உள்ளனர்.

தனிப்படை போலீஸார் தொடர்ந்து தங்களது விசாரணையை நடத்தி வரும் நிலையில், உதகையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் இன்று(பிப்.25), இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சயான், வாளையாறு மனோஜ் ஆகியோர் மட்டுமே நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

விசாரணையின் போது ஆஜரான அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஷாஜகான், இதுவரை 180 பேரிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு இருப்பதாகவும், மின்னணு சாட்சிகளை சேகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் விசாரணையை முடிக்க காலதாமதம் ஆவதாகவும், விரைவில் கூடுதல் குற்ற பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மேலும், தனபால் மற்றும் ரமேஷ் ஆகியோர் தங்களது ஜாமீன் நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அரசு தரப்பு வழக்கறிஞர்கள், கனகராஜ் பயன்படுத்திய 2 செல்போன்கள் எரிக்கபட்டுள்ளதாகவும், அவர்களின் நிபந்தனையை தளர்த்தினால் சாட்சிகள் கலைக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை மார்ச் மாதம் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி சஞ்சய் பாபா உத்தரவிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in