Published : 25 Feb 2022 03:09 PM
Last Updated : 25 Feb 2022 03:09 PM

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகளை அடுக்கிய நாராயணன்.... 

சென்னை: உக்ரைனில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு சிலர், குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள அறிக்கை: "உக்ரைன் நாட்டில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்த இந்திய அரசின் நடவடிக்கைகள் குறித்த பல்வேறு கருத்துக்களை சுயநலமிக்க சில விஷமிகள் தெரிவித்து வருகிறார்கள்".

கடந்த 15-ம் தேதி, உக்ரைனில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதைக் கருத்தில் கொண்டு, அத்தியாவசியப் பணியில் இல்லாத அணைத்து இந்தியா்களும் மற்றும் அனைத்து இந்திய மாணவர்களும் உக்ரைனை விட்டு தற்காலிகமாக வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது.

பிப்.16: உக்ரைனில் உள்ள இந்தியர்கள் நடைமுறை சிக்கல்களின்றி, எந்த தாமதமுமில்லாமல் பயணம் செய்ய இந்தியா - உக்ரைன் நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் (Air bubble Scheme) ஏற்படுத்தப்பட்டது.

பிப்.18: பிப்.22, 24, 26 ஏர் இந்தியா விமானங்கள் உக்ரைனிலிருந்து இந்தியாவிற்கு கிளம்பும் என அறிவித்தது.

பிப்.20: இரண்டாவது முறையாக உக்ரைனை விட்டு உடன் வெளியேறுமாறு இந்திய தூதரகம் அறிவுறுத்தியது. ஆனாலும் போதிய பயணிகள் முன் வராத நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் பயண தேதியை தள்ளி வைக்க முன்வந்தது.

பிப்.22: கூடுதல் விமானங்கள் இயக்கப்படுவது குறித்து மூன்றாவது முறையாக இந்தியர்களை உக்ரைனை விட்டு வெளியேற அறிவுறுத்தல்.

பிப்.22: இந்தியாவிற்கு செல்ல தயங்கிய மாணவர்களை, ஆன்-லைன் வகுப்புகள் நடத்தப்படும் என்ற உக்ரைன் பல்கலைக்கழகங்களின் அறிவிக்கைகளை சுட்டிக்காட்டி உடன் இந்தியாவிற்கு செல்லுமாறு தூதரகம் வலியுறுத்தியது.

பிப்.22: இந்தியர்களுக்கு உதவுவதற்காக உக்ரைன் தலைநகர் 'கீவ்' நகருக்கு ரஷ்ய மொழி தெரிந்த 2 அதிகாரிகளை அனுப்பி வைத்தது தூதரகம்.

பிப்.24: ஐந்தாவது அறிவுறுத்தல். அவரவர்கள் எங்கு தங்கி இருந்தார்களோ அங்கேயே இருக்க வேண்டும் என கூறப்பட்டது.

வான்வழி மூடப்பட்ட காரணத்தால், வெளியேறுவதற்கான மாற்று ஏற்பாடுகள், தாக்குதல் குறைவாக இருக்கும் என கருதப்படும் நாட்டின் மேற்கு பகுதிக்கு பாதுகாப்பாக செல்வதற்கு உதவி செய்வதற்கான எண்கள் அறிவிக்கப்பட்டன.

ராணுவ சட்டம் குறித்த விளக்கம் அளிக்கப்பட்டதோடு, தங்கியிருக்கும் விடுதிகள் மற்றும் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்திய பிரதமர் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து ரஷ்ய அதிபருடன் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து இந்திய அரசு உக்ரைனில் உள்ள இந்தியர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள ஒரு சிலர், குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடு பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை தெரிவிப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அங்கு நடக்கும் ஆயுத தாக்குதல்களை விட நம் நாட்டில் உள்ள ஒரு சில விஷமிகளின் அரசியல் விமர்சனங்கள் அவர்களின் வக்கிர எண்ணத்தை, சுயநல அரசியலை வெளிப்படுத்துகிறது". இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x