Published : 25 Feb 2022 07:46 AM
Last Updated : 25 Feb 2022 07:46 AM

நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்தது: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தகவல்

சென்னை: நாசாவின் செயற்கைக்கோளுக்கு சிக்காத சூரிய புரோட்டான் நிகழ்வுகளைச் சந்திரயான்-2 விண்கலம் கண்டறிந்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), சந்திரயான்-2 விண்கலத்தை 2019 ஜூலை 22-ல் ஹரிகோட்டாவில் இருந்து அனுப்பியது. பல்வேறு கட்டத்துக்குப் பிறகு, சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக நிலவை நெருங்கியது. ஆனால், செப்.7-ம் தேதி சந்திரயான் விண்கலத்தின் லேண்டர் கலன் திட்டமிட்டபடி நிலவில் தரையிறங்கவில்லை. திடீர் தொழில்நுட்பக் கோளாறால் லேண்டர் வேகமாகச் சென்று நிலவின் தரையில் மோதியதாகக் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், விண்கலத்தின்மற்றொரு பகுதியான ஆர்பிட்டர்,நிலவின் சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. அதன்பிறகு, நிலவைச் சுற்றிவரும் ஆர்பிட்டர் பல்வேறு தகவல்களைப் பூமிக்கு அனுப்பி வருவதாக இஸ்ரோ தெரிவித்தது. இந்நிலையில், சூரிய புரோட்டான் நிகழ்வுகளை சந்திரயான் விண்கலம் கண்டறிந்துள்ளது.

இதுதொடர்பாக ‘இஸ்ரோ’ கூறியதாவது: சந்திரயான் 2-வின் ஆர்பிட்டர் கருவியானது சூரியனின் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்கள், அயனியாக்கம் செய்யப்பட்ட துகள் மற்றும் காந்தப்புலங்களின் சக்திவாய்ந்த ஓடை ஆகியவற்றைக் கடந்த ஜன.18-ம் தேதி பதிவு செய்துள்ளது. இந்த வெப்ப வெளியேற்றங்கள்தான் புவி காந்தப் புயல்களுக்கும், வானத்தில் துருவ ஒளியை ஒளிரவும் வழிவகுக்கிறது. இத்தகைய சூரிய புரோட்டான் நிகழ்வுகளின் தாக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதால், வெவ்வேறு கிரக அமைப்புகளில் இது எவ்வாறுசெயல்படுகிறது என்பது புரிந்துகொள்ள உதவும்.

சூரியன் மிக உக்கிரமாக இருக்கும்போது, ​​சூரிய எரிப்பு எனப்படும் கண்கவர் வெடிப்புகள் ஏற்படுகின்றன. அப்போது சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களே ஆகும்.

இந்த ஆற்றலின் சக்திக்கு ஏற்ப, அவை விண்வெளியைக் கடுமையாகப் பாதிக்கிறது. இதில் ஏற்படும் கதிர்வீச்சு விண்வெளி நிலையங்களில் இயங்கும் மனிதர்களைப் பாதிக்கிறது. மேலும், பூமியின் நடுத்தர வளிமண்டலத்தில் பெரிய அளவில் அயனியாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவைன சூரியவெடிப்பில் ஏற்படும் பிழம்புகளின்வலிமைக்கு ஏற்ப வகைப்படுத்தப்படுகின்றன.

ஏ - மிகச்சிறியவை. அதைத் தொடர்ந்து பி,சி,எம் மற்றும் எக்ஸ் உள்ளது. ஒவ்வொரு வகுப்பிலும் 1 முதல் 9 வரையிலான நுணுக்கமான அளவுகளும் உள்ளன. உதாரணமாக எம்2 என்பது எம்1-ஐ விட 2 மடங்கு வலிமை கொண்டது.

அதன்படி, சமீபத்தில், இரண்டு எம் வகுப்பு அளவுள்ள வெடிப்புகள் நடந்துள்ளன. அவற்றில், ஒன்று எம் 1.5 அளவில் வெப்ப பிழம்புகளின் வெளியேற்றங்களுடனும், மற்றொன்று எம் 5.5 அளவுக்கு ஆற்றல்மிக்க துகள்களையும் கிரகங்களுக்குள் செலுத்தியுள்ளது.

இந்த சூரிய புரோட்டான் நிகழ்வைப் பூமியைச் சுற்றி வரும் நாசாவின் புவிசார் செயல்பாட்டுச் சுற்றுச்சூழல் செயற்கைக்கோள் (GOES) கண்டறியவில்லை. ஆனால், நிலவைச் சுற்றி வரும் நமது சந்திரயான் -2 தனது மென்மையான எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர் மூலம் இந்த நிகழ்வைக் கண்டறிந்துள்ளது. இவ்வாறு இஸ்ரோ தெரிவித்துள்ளது.

சந்திரயான்-2 விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடையாமல்போனதும், இஸ்ரோ விஞ்ஞானிகள் கடுமையாக சோர்வடைத்திருந்தனர். ஆனால், தற்போது நாசாவுக்கு சிக்காத அறிய தகவல்கள் சந்திரயான்-2வின் ஆர்ப்பிட்டரில் சிக்கிஉள்ளது விஞ்ஞானிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூரியனின் பிழம்புகள் விண்வெளியில் வெடித்துச் சிதறும். அவை சில நேரங்களில் ஆற்றல்மிக்க துகள்களைப் பூமி போன்ற கிரகங்களுக்குள் நுழைகிறது. இவற்றில் பெரும்பாலானவை அதிக ஆற்றல் கொண்ட புரோட்டான்களேயாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x