Published : 05 Apr 2016 12:50 PM
Last Updated : 05 Apr 2016 12:50 PM

பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனே திரும்ப பெறுக: ஜெ.

தவறான விலை நிர்ணயக் கொள்கையால் மாற்றியமைக்கப்பட்டுள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எண்ணெய் நிறுவனங்கள் இன்று (5.4.2016) முதல் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 2 ரூபாய் 19 காசு மற்றும் டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் என்ற அளவிலும் உயர்த்தியுள்ளன. வழக்கம் போலவே, எண்ணெய் நிறுவனங்கள் உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் காரணமாக இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.

உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் அவ்வப்போது ஏற்படும் மாறுதல் ஆகியவற்றை கணக்கிட்டு விலை உயர்வை மக்கள் மீது சுமத்துவது நியாயமற்றதாகும்.

எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயை தான் இறக்குமதி செய்து தங்களது எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களில் அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் ஆகிய எண்ணெய் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்கின்றன.

இந்தியாவிலேயே எடுக்கப்படும் கச்சா எண்ணெயை வாங்கியும் அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசல் போன்ற எண்ணெய் பொருட்களைத் தயாரிக்கின்றன.

அவ்வாறு இருக்கும்போது உலகச் சந்தையில் நிலவும் பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப இங்கே விலை நிர்ணயம் செய்வது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விலை நிர்ணயக் கொள்கை இல்லை.

இந்தத் தவறான விலை நிர்ணயக் கொள்கையே பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு பெரிதும் காரணமாக உள்ளது.

தற்போது உயர்த்தப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரப்படி பெட்ரோலுக்கு 86 சதவீதமும், டீசலுக்கு 76.1 சதவீதமும் மத்திய கலால் வரி விதிக்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களான பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கு இவ்வளவு அதிகமாக கலால் வரி விதிப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதிப்பதோடு, பொருளாதார வளர்ச்சிக்கும் ஊறு விளைவிக்கும்.

மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பெட்ரோலுக்கு 11 ரூபாய் 77 காசு மற்றும் டீசலுக்கு 13 ரூபாய் 57 காசு என்ற அளவிலும் மத்திய கலால் வரியை உயர்த்தியுள்ள நிலையில், தற்போதைய விலை உயர்வு நியாயமானதல்ல.

உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறையும் போது, கலால் வரியை உயர்த்துவது, அவை விலை உயரும் போது, அந்த விலை உயர்வை மக்கள் தலையில் சுமத்துவது என்பது ஏற்புடையதல்ல.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அவ்வப்போது உள்ள பொருளாதார சூழ்நிலைகள், இந்திய பங்குச் சந்தை மற்றும் கடன் சந்தைகளில் செய்யும் முதலீடுகளை அன்னிய நிதி நிறுவனங்கள் திரும்ப எடுப்பது, 2 பெரும் தனியார் நிறுவனங்கள் வெளி நாடுகளில் அமெரிக்க டாலர் அடிப்படையில் பெற்ற கடனை திருப்பிச் செலுத்துவது ஆகியவற்றின் அடிப்படையில் அவ்வப்போது மாறுதல்கள் ஏற்படும். இந்த மாறுதல்களுக்கென ஒரு தனி நிதியத்தை ஏற்படுத்துவது தான் சரியான தீர்வாக அமையும்.

அவ்வாறில்லாமல் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு என்ற காரணத்தை காட்டி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது சரியான பொருளாதாரக் கொள்கை அல்ல.

எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு காரணமாக, சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசியப் பொருட்கள் விலை உயரும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்க்கை பாதிப்படையும். எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x