

சேலம்: நடிகர் அஜீத் நடித்த திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் திரையிடப்பட்டது. சேலத்தில் நேற்று அதிகாலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் சேலம் மெய்யனூர் சாலையில் உள்ள தியேட்டர் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர்.
அதிகாலை 4 மணிக்கு திரையிடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அதிகாலை 5 மணிக்கு படம் திரையிடப்பட்டது. 5 மணிக்கு படம் பார்த்து விட்டு காலை 7.30 மணிக்கு ரசிகர்கள் வெளியே வந்தனர். இரண்டாவது காட்சி 7.30 மணிக்கு திரையிடப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 8 மணிக்கு திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ரசிகர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதில், ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் தியேட்டர் முன்பு இருந்த கண்ணாடி, மேற்கூரை போன்றவற்றை உடைத்து சேதப்படுத்தினர். இதனால், தியேட்டர் நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர், ரசிகர்களை தியேட்டருக்குள் அனுமதித்து, திரைப்படம் திரையிடப்பட்டது. இதனால், ரசிகர்களால் தொடர்ந்து தியேட்டரை தாக்கும் சம்பவம் தடுத்து நிறுத்தப்பட்டது. தியேட்டரை அஜீத் ரசிகர்கள் சேதப்படுத்தியது குறித்து பள்ளப்பட்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.