Published : 25 Feb 2022 06:20 AM
Last Updated : 25 Feb 2022 06:20 AM

மயிலாப்பூரில் மார்ச் 1-ம் தேதி மாலை கபாலீஸ்வரர் கோயில் சிவராத்திரி விழா: 40,000 பேர் பங்கேற்பர் என அமைச்சர் சேகர்பாபு தகவல்

சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி மாலை நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் சுமார் 40 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பர் என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார்.

சென்னை ராமகிருஷ்ணா மடம் சாலையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் மார்ச் 1-ம் தேதி மகா சிவராத்திரியன்று சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இங்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சிவனை ஜோதி வடிவில் பார்க்கும் தினத்தை சிவராத்திரியாக கொண்டாடி வருகிறோம். இதையொட்டி, அறநிலையத் துறை வரலாற்றில் முதல்முறையாக மகா சிவராத்திரியன்று 100-க்கும் மேற்பட்ட ஆன்மிகக் கலைஞர்கள் இணைந்து, மார்ச் 1-ம் தேதி மாலை 6 மணி முதல் அடுத்த நாள் காலை 6 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துகின்றனர்.

மங்கள இசை, சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சி, இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. மேலும், ஆன்மிகம் தொடர்பான 10 விற்பனையகங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில் பழநி பஞ்சாமிர்தம் உட்பட முக்கியமான கோயில்களின் பிரசாதங்கள் விற்பனை செய்யப்படும். மேலும், கோயில் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

சிவராத்திரி நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் பக்தர்கள், தங்கள் வாகனங்களை மாடவீதிகளில் நிறுத்திக் கொள்ளலாம். நிகழ்ச்சி அரங்கில் 3 ஆயிரம் பேர் அமரலாம். இந்த நிகழ்ச்சியில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையொட்டி, பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு சிவாலயங்கள் அனைத்தும் மகா சிவராத்திரியன்று வண்ண விளக்குகளால் ஜொலிக்கும்.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெறுவது குறித்து அறநிலையத் துறைக்கு தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து, முதல்வரின் உத்தரவின் பேரில் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

அறநிலையத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

மங்கள இசை, சொற்பொழிவு, நாட்டியம், இசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், பக்தி பாடல்கள், கிராமிய இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x