Published : 25 Feb 2022 07:33 AM
Last Updated : 25 Feb 2022 07:33 AM
கல்பாக்கம்: கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராம மக்களுக்காக சென்னை அணுமின் நிலையம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்காக ரூ.19.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மார்ச் 6, 27 மற்றும் ஏப் 3-ம் தேதிகளில் கண் சிகிச்சை முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கை மாவட்டம், கல்பாக்கத்தில் இயங்கிவரும் சென்னை அணுமின் நிலையம் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களின் மேம்பாட்டுக்காக கூட்டாண்மை சமூக பொறுப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில், கிராம மக்களுக்காக அவ்வப்போது இலவச கண் அறுவை சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான கண் சிகிச்சை முகாம் நடத்துவதற்காக, சென்னை அணுமின் நிலையம் சார்பில் ரூ.19.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் கண் மருத்துவமனை மூலம் இந்த முகாமை நடத்துவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சென்னை அணுமின் நிலையம் சார்பில் கூட்டாண்மை சமூக பொறுப்புக் குழு தலைவர் சுபாமூர்த்தி மற்றும் தனியார் கண் மருத்துவமனை சார்பில் தலைமை மருத்துவர் அரவிந்த் ஆகியோர் பங்கேற்று ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதன்மூலம், வரும் மார்ச் 6, 27 மற்றும் ஏப் 3-ம் தேதிகளில் கண் சிகிச்சை முகாம் நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது. இந்த முகாமில் கண் பரிசோதனை, அறுவை சிகிச்சை உள்ளிட்ட கண் சம்பந்தமான பல்வேறு சிகிச்சைகள் வழங்கப்பட உள்ளதாக அணுமின் நிலைய நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிகழ்ச்சியில், சென்னை அணுமின் நிலைய இயக்குநர் பலராம மூர்த்தி, மேலாளர் (மனிதவளம்) சீனிவாசன், தனியார் மருத்துவமனை மேலாளர் ராஜேஷ்உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT