Published : 22 Apr 2016 10:01 AM
Last Updated : 22 Apr 2016 10:01 AM

ஜெயலலிதா பிரச்சார பயணத்தில் மீண்டும் மாற்றம்

முதல்வர் ஜெயலலிதாவின் பிரச்சார சுற்றுப்பயணத்தில் மீண்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மே 3-ம் தேதிக்கு பதில், ஏப்ரல் 29-ம் தேதி விழுப்புரத்தில் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடக்கும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து, முதல்வர் ஜெயலலிதா கடந்த 9-ம் தேதி சென்னை தீவுத்திடலில் பிரச்சார பயணத்தை தொடங்கினார். தொடர்ந்து, விருதாச்சலம், தருமபுரி, அருப்புக்கோட்டை, காஞ்சிபுரம், சேலம் என 5 இடங்களில் பிரச்சாரத்தை முடித்துள்ளார்.

கடந்த 11-ம் தேதி பிரச்சாரப் பயணத்தில் நெல்லை, வேலூர் பிரச்சார தேதிகள் மாற்றப்பட்டன. இந்நிலையில், நேற்று 2- வது முறையாக பிரச்சார பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி , ஏப்ரல் 23-ம் தேதி (நாளை) திருச்சியிலும், 25-ம் தேதி புதுச்சேரி, 27-ம் தேதி மதுரை, 29-ம் தேதி விழுப்புரம் ஆகிய இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். தொடர்ந்து, மே மாதம் 1-ம் தேதி கோவை, 5-ம் தேதி பெருந்துறை (ஈரோடு) , 8-ம் தேதி தஞ்சை, 10-ம் தேதி வேலூர், 12-ம் தேதி நெல்லையிலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். முன்னதாக வெளியிடப்பட்ட பிரச்சார சுற்றுப்பயண பட்டியலில், மே 3-ம் தேதி விழுப்புரத்தில் பிரச்சாரக் கூட்டம் நடப்பதாக இருந்தது. தற்போது, ஏப்ரல் 29 வெள்ளிக்கிழமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இத்தகவலை அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x