

‘‘உள்ளாட்சித் தேர்தல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நடந்த தேர்தல்.இதில் ஆட்சியாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தோல்வியடைந்துள்ளனர்’’ என்று கடம்பூர் ராஜு எம்எல்ஏ கூறினார்.
முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா 74-வது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டியில் உள்ள அவரது சிலைக்கு கடம்பூர் செ.ராஜு எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செண்பகவல்லி அம்மன் கோயிலில் அன்னதானத்தை எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுக மக்களை நம்பி தைரியமாக உள்ளாட்சி தேர்தலில் தனியாகபோட்டியிட்டது. ஆனால், திமுக முழு பலத்துடன், ஆட்சி அதிகாரத்தில் இருந்தும்கூட மிகப்பெரிய கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தல் மக்களுக்கும், ஆட்சியாளர்களுக்கும் நடந்த தேர்தல். இதில் ஆட்சியர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் தோல்வியடைந்துள்ளனர் என்றார்.
விளாத்திகுளத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் அதிமுகவினர் ஜெயலலிதா உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ளதெற்கு மாவட்ட அதிமுக அலுவலகம்முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர்.
நிகழ்ச்சியில் அதிமுக மாநிலஅமைப்புச் செயலாளர் என்.சின்னதுரை, மாவட்ட அவைத் தலைவர்திருப்பாற் கடல், முன்னாள் நகராட்சி தலைவர் இரா.ஹென்றி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதுபோல் தூத்துக்குடி சிதம்பரநகர் பகுதியில் அதிமுக மாநில அமைப்புச் செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் அமலி டி.ராஜன், முன்னாள் துணை மேயர் சேவியர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி 30-வது வட்ட அமமுக சார்பில் ஜெயலலிதா உருவப்படத்துக்கு வட்டச் செயலாளர் காசிலிங்கம் மாலை அணிவித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.