20 ஆண்டுகளுக்கு பின் நிலக்கோட்டையில் களமிறங்கும் திமுக

20 ஆண்டுகளுக்கு பின் நிலக்கோட்டையில் களமிறங்கும் திமுக
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை (தனி) தொகுதியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக களமிறங்க உள்ளது. இத்தொகுதியில் 49 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளில் நிலக்கோட்டை (தனி) தொகுதியை தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்கே திமுக ஒதுக்கி வந்துள்ளது. இந்த முறையும் கூட்டணிக் கட்சிக்கு ஒதுக்கப்படும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், கடந்த நான்கு தேர்தல்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கு இந்தமுறை இத் தொகுதி ஒதுக்கப்படவில்லை.

கடந்த 1991-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக இத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தது. இதையடுத்து வந்த கடந்த நான்கு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், தமாகா ஆகியவற்றுக்கு ஒதுக்கிவந்தது. இந்நிலையில் தற்போது 20 ஆண்டுகால இடைவெளிக்கு பின் நிலக்கோட்டை தொகுதியில் திமுக மீண்டும் களம் இறங்குகிறது. காங்கிரஸுக்கான தொகுதிகள் பட்டியலில் நிலக்கோட்டை இல்லை என்பதை அறிந்த திமுக தொண்டர்கள் உற்சாகமடைந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

முன்னதாக, 1967-ம் ஆண்டு அண்ணாத்துரை தலைமையில் தேர்தலில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.முனியாண்டி வெற்றிபெற்றார். இதன்பிறகு, இத்தொகுதியில் திமுக வெற்றிபெறவே முடியவில்லை. இதனால் தான் அடுத்தடுத்த தேர்தல்களில் கூட்டணிக் கட்சிகளுக்கே ஒதுக்கியது.

இந்தமுறை வெற்றிபெற்றால் தான் தொடர்ந்து திமுக வினரே போட்டியிட அடுத்தடுத்த தேர்தல்களில் வாய்ப்பு கிடைக்கும். இல்லையென்றால், மீண்டும் அடுத்த தேர்தல்களில் கூட்டணிக் கட்சிக்கு சென்றுவிடும் என்று தீவிர களப்பணியில் இறங்க திமுகவினர் தயாராகி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in