'நாங்கள் இருக்கும் பகுதிக்கு 60 கி.மீ தூரத்தில் குண்டு வெடித்தது' - உக்ரைனிலிருந்து தமிழக மாணவர் பகிர்ந்த தகவல்

உக்ரைனில் படிக்கும் செஞ்சி மாணவர் முத்தமிழன்
உக்ரைனில் படிக்கும் செஞ்சி மாணவர் முத்தமிழன்
Updated on
1 min read

விழுப்புரம்: உக்ரைனில் போர் நடுவே சிக்கித் தவிக்கும் செஞ்சி மாணவர் முத்தமிழன் என்பவரை மீட்டுத்தருமாறு அவரது பெற்றோர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அங்குள்ள நிலைமை குறித்து நம்மிடம் அம்மாணவர் தகவல் பகிர்ந்தார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி - சக்கராபுரம் பகுதியில் வசிக்கும் சேகர் - விஜயலட்சுமி தம்பதியினரின் மகன் முத்தமிழன் உக்ரைனில் உள்ள வினிட்ஸாவில் இறுதியாண்டு மருத்துவம் படிக்கிறார். அவரை மீட்டுத் தருமாறு இம்மாணவரின் பெற்றோர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

முத்தழகன் உடன் பயிலும் பிற தமிழக மாணவர்கள்.
முத்தழகன் உடன் பயிலும் பிற தமிழக மாணவர்கள்.

வாட்ஸ் ஆப் கால் மூலம் முத்தமிழனை தொடர்புகொண்டு கேட்டபோது, ''இன்று காலை 6.30 மணிக்கு நாங்கள் வசிக்கும் பகுதிக்கு 60 கிலோமீட்டர் தூரத்தில் குண்டு வெடித்தது. நில அதிர்வும் ஏற்பட்டது. இத்தகவல் அறிந்த உக்ரைன் மக்கள் கடைவீதிகளில் பொருட்களை வாங்க ஆரம்பித்தனர். ஏடிஎம்மில் கூட்டம் குவிந்தது. தங்கி இருக்கும் இடத்தைவிட்டு யாரும் வரவேண்டாமென்று உக்ரைன் அரசு அறிவித்துள்ளது.

தமிழக மாணவர்கள் சுமார் 150 பேர் உட்பட இந்திய மாணவர்கள் 800 பேர் எங்கள் கல்லூரியில் படிக்கின்றனர். தற்போது 5 அல்லது 5 நாட்களுக்கு மட்டும் எங்களுக்கான உணவுப்பொருள் கையிருப்பில் உள்ளது. எங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் முயற்சிக்க வேண்டும்'' என்றார்.

முன்னதாக, உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், உக்ரைனின் விமானப்படைத் தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அண்மைத் தகவலில் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கிய ரஷ்யாவுக்கு உலக நாடுகள், குறிப்பாக மேற்கத்திய நாடுகள் தங்களின் கண்டனங்களை பதிவு செய்துவரும் சூழலில், ''உக்ரைனின் ராணுவ கட்டமைப்புகளை மட்டுமே குறிவைத்து பிரத்யேக ஆயுதங்கள் மூலம் திட்டமிட்டு தாக்குதல் நடத்துகிறோம். பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளைத் தாக்கவில்லை'' என்று ரஷ்யா தெரிவித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in