உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: சு.வெங்கடேசன் எம்.பி

உக்ரைனில் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்க: சு.வெங்கடேசன் எம்.பி
Updated on
1 min read

சென்னை: "இந்தியாவிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு படிக்கச் சென்றுள்ள தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய மத்திய அரசு உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்" என்று சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதம்: "மதுரையில் இருந்து உக்ரைன் நாட்டுக்குச் சென்று படிக்கிற மாணவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். தமிழ்நாடு அளவில் எனும்போது இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாக இருக்கும். அவர்களின் பெற்றோர்கள் பதற்றத்தோடு என்னைத் தொடர்பு கொண்டு வருகிறார்கள்.

உக்ரைனில் போர்ச் சூழல் நிலவுகிறது என்றும், குண்டு வெடிப்புகள் பல பகுதிகளில் நடந்தேறி வருகிறது என்றும் செய்திகள் வருகின்றன. ட்விட்டரில் உக்ரைனுக்கான இந்திய தூதர் விடுத்துள்ள இந்தச் செய்தி அங்குள்ள கடுமையான சூழலை உறுதி செய்கிறது. "நிலைமை மிகப் பதற்றமாக உள்ளது. நிச்சயமற்றதாகவும் உள்ளது. இது பெரும் கவலைகளை உருவாக்கியுள்ளது.

வான் வழி மூடப்பட்டுவிட்டது. ரயில் அட்டவணைகள் கடைபிடிக்கப்படவில்லை. சாலைகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றன."இத்தகைய சூழலில் பல நாடுகள் தங்கள் நாட்டு மக்களை பாதுகாப்பாக திரும்ப கொண்டு வந்து சேர்க்க ஏற்பாடுகள் செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய வெளியுறவு அமைச்சகமும் உச்சபட்ச அளவிலான அரசு முறை தொடர்புகளின் மூலம் தமிழ் மாணவர்களின் பாதுகாப்பையும், அவர்களின் நாடு திரும்பலையும் உறுதி செய்ய உடனடி முயற்சிகளை செய்ய வேண்டும்" என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in