

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து திமுக முன்னாள் அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் மற்றும் குடும்பத் தினர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், அவர்கள் 3 வாரத்தில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006 முதல் 2011 வரை யிலான திமுக ஆட்சியில் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர்கே பன்னீர்செல்வம். கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தாலுகாவை சேர்ந்தவர். திமுக ஆட்சிக் காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.3 கோடியே 1 லட்சத்து 56 ஆயிரம் மதிப்புக்கு சொத்து குவித்ததாக எம்ஆர்கே பன்னீர்செல்வம், அவரது மனைவி செந்தமிழ்செல்வி, மகன் கதிரவன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2012-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில், கடலூர் மாவட்ட தலைமை ஜுடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையே, இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி எம்ஆர்கே பன்னீர்செல்வம் உள்ளிட்ட 3 பேரும் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்களை விசாரித்த நீதிமன்றம், 3 பேரையும் விடுவித்து கடந்த பிப்ரவரி 3-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். நீதிபதி பி.தேவதாஸ் இம்மனுக்களை விசாரித்து, எம்ஆர்கே பன்னீர் செல்வம் உள்ளிட்ட 3 பேரும் 3 வாரத்தில் பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.