Published : 24 Feb 2022 08:38 AM
Last Updated : 24 Feb 2022 08:38 AM
சென்னை: சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக, திமுகவைச் சேர்ந்த நரேஷ் என்பவரை அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பிடித்து, போலீஸில் ஒப்படைத்தனர்.
அப்போது நரேஷை தாக்கி, அரை நிர்வாணப்படுத்தியதாக ஜெயக்குமார் உட்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டை யார்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
முன்னதாக, கள்ள ஓட்டுப் போடமுயன்றவரை பிடித்துக் கொடுத்தும், போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி, ஜெயக்குமார் தலைமையில் 100-க்கும்மேற்பட்ட அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அரசு உத்தரவை மீறி, தொற்று நோய் பரப்பும் வகையில் சாலை மறியலில் ஈடுபட்டதாக, ஜெயக்குமார் உள்ளிட்ட 113 அதிமுகவினர் மீது ராயபுரம் போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்தனர்.
திமுக பிரமுகர் நரேஷை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜெயக்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இதற்கிடையில், ராயபுரம் போலீஸார் பதிவு செய்த வழக்கில், 2-வது முறையாக கைது செய்வதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு பிடி வாரன்ட் பிறப்பிக்கப்பட்டு, ஜார்ஜ் டவுன் 16-வது குற்றவியல் நடுவர் தயாளன் முன்னிலையில் ஜெயக்குமார் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த குற்றவியல் நடுவர், ஜெயக்குமாரை மார்ச் 9-ம் வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
மேலும், ஜெயக்குமாருக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நடுவர் தயாளன் விசாரித்தார்.
அப்போது, ஜெயக்குமாரின் வழக்கறிஞர்கள் ‘‘இந்த வழக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரண மாக தொடரப்பட்டுள்ளது. கள்ள ஒட்டுப் போட முயன்ற நபர் திமுகவைச் சேர்ந்தவர் மட்டுமின்றி, அவர் மீது ஏற்கெனவே 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே, அவரது சட்டையைக் கழற்றி, கைகளை கட்டிஉள்ளனர்’’ என்றுகூறி, அதற்கான வீடியோ ஆதாரங்களையும் சமர்ப்பித்தனர்.
மேலும், கள்ள ஓட்டுப்போட முயன்றவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக, பிடித்துக் கொடுத்த ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது, ஆளுங்கட்சி அழுத்தம் காரணமாக வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர் மீது போடப்பட்டுள்ள பிரிவுகள் அனைத்தும் ஜாமீனில் விடக்கூடியவை என்பதால், அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் வாதிட்டனர்.
அப்போது, ஜெயக்குமார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட மேலும் 2 பிரிவுகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில்தெரிவிக்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.இதேபோல, திமுக தரப்பு வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோரும் ஜாமீன் வழங்க எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட குற்றவியல் நடுவர் தயாளன், ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். 2-வது வழக்கில் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று (பிப். 24) நடைபெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT