

கோவை மாநகராட்சியில் மேயர், துணை மேயர் பதவிகளை கைப்பற்ற திமுக கவுன்சிலர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சிக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்பட்டு, நேற்று முன்தினம் அதன் முடிவுகள் வெளியாகின. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. கட்சி வாரியாக பார்க்கும் போது, கோவை மாநகராட்சியில் திமுக 73 வார்டுகளை வென்றுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 9, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 4, மதிமுக 3, கொமதேக 2, மமக 1 இடம் வென்றுள்ளது.
அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக 3, எஸ்.டி.பி.ஐ 1 இடம் வென்றுள்ளது. கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பாரம்பரியம் மிக்க கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயர் யார் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.
மாநகராட்சியை கைப்பற்றிய திமுகவில் 43 பெண் கவுன்சிலர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில், முன்னாள் கவுன்சிலர்கள் சிலரும் உள்ளனர்.
திமுக தலைமை யாரை அறிவிக்கிறதோ அவர் மேயர் வேட்பாளராக போட்டியிடுவார். திமுக சார்பில் மேயர் வேட்பாளராக போட்டியிடுபவர், எந்த எதிர்ப்பும் இன்றி, ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படுவர். அதிகாரம் மிக்க மேயர் பதவியை கைப்பற்ற, வெற்றி பெற்ற பெண் கவுன்சிலர்கள் கட்சி தலைமையிடம் முனைப்புடன் முயற்சித்து வருகின்றனர்.
மேயர் பதவிக்கு போட்டியிடுபவர்களில், கட்சியில் அவர்களது பங்களிப்பு, மக்கள் செல்வாக்கு, சபையை திறம்பட நடத்தும் திறன், அனுபவம் உள்ளதா என்பது போன்றவற்றையும் திமுக தலைமை ஆய்வு செய்கிறது. இதன் அடிப்படையில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர், கோவை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தேர்வு செய்யப்படுவார். தற்போதைய சூழலில் மேயர் ரேஸில், 46-வது வார்டு கவுன்சிலர் மீனா லோகு, 52-வது வார்டு கவுன்சிலர் இலக்குமி இளஞ்செல்வி, 97-வது வார்டு கவுன்சிலர் நிவேதா சேனாதிபதி ஆகியோர் முன்னிலையில் உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
துணை மேயர் பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்படும். திமுகவில் 32 ஆண்கள் தேர்தலில் வென்றுள்ளனர். துணைமேயர் பதவியும் கூட்டணிக்கு ஒதுக்காமல் திமுகவைச் சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும் என்று கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். இதனால், துணை மேயர் பதவியை கைப்பற்ற திமுக ஆண் கவுன்சிலர்கள் தங்களது கட்சித் தொடர்புகள் மூலம் முயற்சித்து வருகின்றனர்.
கோவை மாநகராட்சியில் கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, மத்தியம் என 5 மண்டலங்கள் உள்ளன. இந்த 5 மண்டலங்களுக்கும் தலா ஒரு மண்டலத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். 20 வார்டுகள் தலா ஒரு மண்டலமாக பிரிக்கப்பட்டுள்ளது. 20 வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர் ஒருவரே அந்த மண்டலத்துக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். இப்பதவியை கைப்பற்றவும் திமுக கவுன்சிலர்கள் முயன்று வருகின்றனர்.
தவிர, கோவை மாநகராட்சியின் வரிவிதிப்புக் குழு, சுகாதாரக் குழு, கணக்குகள் குழு, பணிகள் குழு, கல்விக்குழு, நகரமைப்புக் குழு ஆகிய குழுக்களுக்கும் தலைவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பதவிகளை கைப்பற்றவும் திமுக கவுன்சிலர்கள் முயன்று வருகின்றனர்.
திமுகவினர் கூறும்போது, ‘‘மேயர், துணை மேயர், மண்டல தலைவர்கள், குழு தலைவர்களுக்கு நியமிக்கப்படும் நபர்கள் குறித்த அறிவிப்பு கட்சி திமுக தலைமையால் விரைவில் அறிவிக்கப்படும். திமுகவுக்கு பெரும்பான்மை உள்ளதால், இம்முறை கோவை மாநகராட்சியில் எந்தப் பதவிகளும் கூட்டணிக்கு ஒதுக்கப்படாது என எதிர்பார்க்கிறோம். கூட்டணி கவுன்சிலர்களுக்கு குழுக்களில் உறுப்பினர் பதவிகள் வழங்கப்படும்,’’ என்றனர்.