

ஆளும் கட்சியின் பணபலம், அதிகார பலத்தை மீறி கோவை மாநகராட்சி வார்டுகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்கள் 3 பேர் வெற்றி பெற்றுள்ளனர் என முன்னாள் அமைச்சரும், அதிமுக கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கோவை மாநகராட்சியின் 38-வது வார்டில் போட்டியிட்ட சர்மிளா சந்திரசேகர், 47-வது வார்டில் போட்டியிட்ட பிரபாகரன், 90-வது வார்டில் போட்டியிட்ட து.ரமேஷ் ஆகியோர் வெற்றிபெற்றனர். இவர்கள் மூவரும் எஸ்.பி.வேலுமணியை அவரது இல்லத்தில் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது மூவரிடமும் மாநகராட்சியில் எப்படி செயல்பட வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
இதுதொடர்பாக வாழ்த்துபெற்ற வார்டு உறுப்பினர்கள் கூறும்போது, "மக்கள் பிரச்சினைகளை மாநகராட்சி மன்றத்தில் அதிமுகவின் குரலாக எடுத்துரையுங்கள் என எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்”என்றனர்.
முன்னதாக எஸ்.பி.வேலுமணி நேற்று தனது ட்விட்டர் பதிவில், “நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சியின் பணபலம், ஆள்பலம், அதிகார பலம் உள்ளிட்டவற்றையும் மீறி, பொதுமக்களின் அமோக ஆதரவைப் பெற்று கோவை மாநகராட்சி தேர்தலில் இவர்கள் மூவரும் வெற்றி பெற்றுள்ளனர்"என்று தெரிவித்துள்ளார்.