

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சியில் முதல் முறையாக நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக-48,சுயேச்சை-7 , அதிமுக-8, காங்கிரஸ்-2, விடுதலை சிறுத்தை-1,மதிமுக-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-1, மமக-1, தமாக-1 இடங்களைப் பிடித்தன. அதிக இடங்களில் வென்று இம்மாநகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவி ஆதிதிராவிடர் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சியில் மேயர் வேட்பாளர் யாரென திமுக மேலிடம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில் ஆதிதிராவிட பெண்கள் வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற 4-வது வார்டை சேர்ந்த த.சித்ரா - படிப்பு பிஎஸ்சி, எம்.பி.ஏ.; 12-வது வார்டு ம.சத்யா - பத்தாம் வகுப்பு; 13-வது வார்டு ப.ரேணுகாதேவி - பி.ஏ; 27-வது வார்டு கா.மகேஸ்வரி - பி.லிட்., 31-வது வார்டு மு.சித்ராதேவி - 10-ம் வகுப்பு; 51-வதுவார்டு ப.லிங்கேஸ்வரி - 8-ம்வகுப்பு, 32-வது வார்டு க.வசந்தகுமாரி பி.டெக்., 8-வது வார்டு ச.ரம்யா - பிஎஸ்சி ஆகியோரின் பெயர்கள் அடிபடுகின்றன. இவர்களில் வசந்தகுமாரிக்கு அதிகவாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேபோல் துணை மேயர் பதவிக்கு திமுகவில் கடும் போட்டி எழுந்துள்ளது. துணை மேயருக்கு தாம்பரம் காமராஜ் , குரோம்பேட்டை காமராஜ், ஜோசப் அண்ணாதுரை ஆகியோர் போட்டியிலிருந்தாலும் குரோம்பேட்டை காமராஜூக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.
மேலும், திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியினர் துணை மேயர் பதவி கேட்டு வருகிறார்கள். அதேபோல் மமகவும் துணை மேயர் பதவியைக் கேட்டு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் துணை மேயர் பதவிக்கு திமுக, காங்கிரஸ், மமக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
இதுகுறித்து திமுகவினர் கூறும்போது, ‘‘தாம்பரம் மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க 7 பெண்கள் போட்டிக் களத்தில் உள்ளனர். ஆனால், இதில் வசந்தகுமாரி என்பவருக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. காரணம் வசந்தகுமாரி பி.டெக். கெமிக்கல் இன்ஜினியரிங் பட்டதாரி ஆவார். மேயர் பதவிக்குத் தகுதி வாய்ந்தவராக கட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் துணை மேயருக்கு பலரின் பெயர் அடிப்பட்டாலும் குரோம்பேட்டை ஜி.காமராஜுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. நல்ல நிர்வாகத் திறமை உள்ளவர் என்பதால் அவருக்கு வாய்ப்பு அதிகம்" என அவர்கள் தெரிவித்தனர்.