

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 32 வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் மேயர் பதவியை 6 பெண் வார்டு உறுப்பினர்கள் கேட்டு வருகின்றனர். இதற்காக கட்சியின் முக்கிய பிரமுகர்களையும், வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களையும் இவர்களது ஆதரவாளர்கள் சந்தித்து ஆதரவு பெறும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தற்கொலை செய்து கொண்டதைத் தொடர்ந்து அந்த வார்டில் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள 50 வார்டுகளில் தேர்தல் நடைபெற்றது. இதில் 31 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 32 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.
காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக சார்பில் 17 பெண்கள் மாநகராட்சி வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர். இவர்களில் 6 பேருக்கு மாநகராட்சி மேயர் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது.
இதற்காக அவர்கள் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்களை சந்திப்பதுடன், கட்சித் தலைமைக்கும் முக்கிய நிர்வாகிகள் மூலம் தங்களுக்கு மேயர் பதவி வழங்க வலியுறுத்தி வருகின்றனர்.
மாநில வர்த்தக அணி துணைச் செயலராக உள்ள ராமகிருஷ்ணனின் மனைவி மல்லிகா 18-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். தற்போது காஞ்சிபுரம் மாநகரத்தின் திமுக நகரச் செயலராக இருக்கும் சன்பிராண்ட் ஆறுமுகம் மகள் சசிகலா 17-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் மேயர் பதவியைப் பிடிக்க கடும் முயற்சியில் இறங்கியுள்ளனர். இவர்கள் இருவரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இவர்கள் தவிர்த்து முன்னாள் எம்எல்ஏ உலகரட்சகன் மகன் ஷோபன்குமாரின் மனைவிசூர்யா 8-வது வார்டிலும், மாவட்ட அவைத்தலைவராக உள்ள சேகர் மனைவி விமலாதேவி 2-வது வார்டிலும், தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ள யுவராஜின் மனைவி மகாலட்சுமி 9-வது வார்டிலும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினராக உள்ள சீனுவாசனின் மனைவி சாந்தி 32-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இவர்களும் மேயர் பதவிக்கான போட்டியில் உள்ளனர். இவர்கள் முன்னாள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், மாவட்டச் செயலர் க.சுந்தர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களை சந்தித்து தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க கேட்டு வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாநகராட்சியில் 52 வார்டு உறுப்பினர்கள் மொத்தம் உள்ளதால் 27 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திமுக கூட்டணி 32 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால் மேயர் பதவியை திமுக சார்பில் போட்டியிடுபவர் போட்டியின்றி தேர்வு செய்வதற்காக வாய்ப்புகள் அதிகம் உள்ளன. போட்டி ஏற்பட்டாலும் எளிதில் திமுக சார்பில் போட்டியிடுபவர் வெற்றி பெறுவார். இதனால் இந்த 6 பெண் வார்டு உறுப்பினர்கள் மேயர் வேட்பாளர் ஆவதற்காக கடும் முயற்சிகளை தங்கள் ஆதரவாளர்கள் மூலம் எடுத்து வருகின்றனர்.