

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் எஸ்.சுந்தரராஜ். இவருக்கு தற்போது போட்டியிட சீட் வழங்கப்பட வில்லை. அதனால் இவரும், ஆதரவாளர்களும் வருத்தத்தில் உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பரமக்குடி(தனி) தொகுதியில் அதிமுக வேட்பாளராக எஸ்.முத்தையா, ராமநாதபுரம் தொகுதியில் எஸ்.மணிகண்டன் போட்டியிடுகின்றனர். முதுகுளத்தூர் தொகுதியில் மறவர் சமூகத்தை சேர்ந்த கீர்த்திகா முனியசாமி போட்டிடுகிறார். இவர் தற்போது பரமக்குடி நகராட்சி தலைவராக உள்ளார்.
அதிமுக ராமநாதபுரம் மாவட்ட பொருளாளராக உள்ள எஸ்.சுந்தரராஜ் 1989-ல் ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக தேர்தலில் போட்டியிட்டபோது, பரமக்குடியில் ஜெயலலிதா அணியில் நின்று வெற்றி பெற்றார். அதனையடுத்து 1991, 2011 தேர்தல்களிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
கடந்த 2011-ம் ஆண்டு செப் டம்பர் 11-ல் பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சியில் கலவரம் ஏற்பட்டது. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலியாகினர். இதனால் அதிமுக ஆட்சியின் மீது ஆதிதிராவிட மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டது. இந்த வெறுப்பை போக்கும் வகையில் சுந்தரராஜ், சில நாட்களில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கடந்த ஓராண்டிற்கு முன்பு விளையாட்டுத் துறை அமைச்சராக இலாகா மாற்றப்பட்டார். தற்போது வரையும் அமைச்சராக நீடித்து வருகிறார். இவர் மீது கட்சி தலைமைக்கு பெரிய அதிருப்தி இல்லை.
ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் மட்டும் உள்கட்சி பூசலில் சிக்கித் தவித்தார். அன்வர்ராஜா எம்பிக்கும், இவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு கடும் பனிப்போர் நிலவி, ஒரு கட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் வார்த்தைகளால் மோதிக்கொண்ட சம்பவ மும் நடைபெற்றது.
ஐந்து ஆண்டுகளில் எந்தக் குற்றச்சாட்டுகளிலும் சிக்காத இவர், கடைசியாக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு புதுக்கோட்டையில் மாணவிகள் விளையாட்டு விடுதிக்கு இரவு நேரத்தில் ஆய்விற்கு சென்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போதுள்ள 16 அமைச்சர்களுக்கு போட்டியிட சீட் வழங்கப்பட்டும், பெரிய குற்றச்சாட்டுகளில் சிக்காத சுந்தரராஜுக்கு சீட் வழங்கப்படாததன் மர்மம் தெரியவில்லை என அவரது ஆதரவாளர்கள் புலம்புகின்றனர். அரசியலில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம், வெள்ளை பேண்ட், வெள்ளை சட்டையுடன் காட்சியளிக்கும் அவர், இரவு,பகல் ஓய்வில்லாமல் மருத்துவமனையில் நோயாளிகளுடன் காலத்தை கழிப்பது வழக்கம். அதனால் டாக்டர் மீண்டும் தனது மருத்துவமனைக்கு கிளம்பிவிடுவார் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.