

தமிழக பாஜக முழு வேட்பாளர் பட்டியல் இன்று அறிவிக்கப்படும் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இதுகுறித்து ராமநாதபுரத் தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத் தில் தேர்தல் கூட்டணியை பொறுத்தவரை ஏற்கெனவே பேசி முடித்து தொகுதிகள் பங்கீடு முடிந்து விட்டது. பாஜகவின் முழுமையான வேட்பாளர் பட்டியல் இன்று (ஞாயிற்றுக் கிழமை) வெளியிடப்படும்.
தமிழகத்தை பொறுத்தவரை அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இத்தேர்தல் உள்ளது. அதிமுக, திமுகவுக்கு மாற்றாக புதிய வளர்ச்சி தரக்கூடிய ஆட்சி வந்தாக வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இது வரை இல்லாத அளவுக்கு 60 சதவீத வாக்காளர்கள் புதிய அரசு வரவேண்டும் என்று உத்வேகத்துடன் உள்ளனர். தமிழ் நாட்டில் புதிதாக வாக்களிக்க உள்ள 1.08 கோடி புதிய வாக் காளர்கள் பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கின்றனர்.
மதுப் பழக்கத்தின் காரணமாக தமிழகம் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஐம்பது ஆண்டுகளில் திமுக, அதிமுக அரசுகளால் செய்ய முடியாத திட்டங்களை 10 ஆண்டுகளில் செயல்படுத்துவோம்.
தனுஷ்கோடிக்கும், தலை மன்னாருக்கும் இடையே பாலம் அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம். அது நிறைவேற்றப் பட்டால் இந்தியாவில் செல்வச் செழிப்பு மிக்க மாவட்டமாக ராமநாதபுரம் திகழும்.
தமிழக மீனவர்களுக்கு நிரந்தரத் தீர்வு, இலங்கைத் தமிழர்களுக்கு சுபிட்சமான வாழ்வு ஏற்பட நடவடிக்கை எடுப் போம். பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு இலங்கை சிறையில் இருந்த 1,500 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடலோர மாவட்டங்களில் பயணிகள் படகு போக்குவரத்து தொடங்க மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.