Published : 21 Apr 2016 02:21 PM
Last Updated : 21 Apr 2016 02:21 PM

அதிமுக, திமுக தலைமையின் வேட்பாளர் மாற்ற நடவடிக்கை: சிவகங்கையில் நம்பிக்கையின்றி பிரச்சாரத்தில் தொய்வு

சிவகங்கை மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் அதிமுக சார்பில் காரைக்குடி தொகுதி வேட்பாளராக கற்பகம் இளங்கோ உள்ளார். திருப்பத்தூர் தொகுதி வேட்பாளராக கரு.அசோகன் உள்ளார். சிவகங்கை தொகுதி வேட்பாளராக பாஸ்கரன் அம்பலம், மானாமதுரை தனித்தொகுதி வேட்பாளராக மாரியப்பன் கென்னடி உள்ளனர்.

இதில் வேட்பாளர்கள் சிலருக்கு கட்சியினரும், வாய்ப்புக் கிடைக்காத சிலரும் தலைமைக்கு புகார் மனுக்களை அனுப்பிவருகின்றனர். ஆங்காங்கே வேட்பாளர்கள் மாற்றம் தொடர்வதால், மற்ற தொகுதி வேட்பாளர்களும் முழுமனதோடு பிரச்சாரத்தில் ஈடுபடமுடியாமல் ஒருவித கலக்கத்தோடு உள்ளனர்.

திமுக சார்பில் திருப்பத்தூர் தொகுதி திமுக வேட்பாளராக மூன்றாவது முறையாக போட்டியிடும் மாவட்டச் செயலாளர் கரு.பெரியகருப்பன், சிவகங்கை தொகுதி வேட்பாளராக மேப்பல் சக்தி என்ற சத்தியநாதன், மானாமதுரை தனித் தொகுதி வேட்பாளராக சித்ரா செல்வி ஆகியோர் போட்டியிடுகின்றனர். திருப்பத்தூர் தொகுதி, சிவகங்கை தொகுதி வேட்பாளர்கள் சுறுசுறுப்போடு பிரச்சாரம், செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்திவருகின்றனர்.

ஆனால், மானாமதுரை தொகுதி வேட்பாளரை மாற்றவேண்டும் என அக்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் கலக்கமடைந்த சித்ராசெல்வி பிரச்சாரம் மேற்கொள்ளாமல் பின்தங்கி உள்ளார்.

இதனால், அதிமுக, திமுக மோதும் இத்தொகுதியில், நான் தான் இறுதி வேட்பாளர் என்ற நம்பிக்கை அவர்களிடையே ஏற்படாததால் தேர்தல் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும், அக்கட்சியினர் தெரிவித்தனர்.

அதிமுக கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் கூறியதாவது: அதிமுக தலைமையால் வேட்பாளர் மாற்றம் தொடர்வதால் தொகுதி வேட்பாளர்களும் கலக்கத்தில் உள்ளனர். இதனால் வேலைகளை தொடங்காமல் சுறுசுறுப்பின்றி உள்ளதால் பிரச்சாரத்தில் தொய்வு ஏற்பட்டுள்ளது என்றனர்.

திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: அதிமுக போல், திமுகவிலும் வேட்பாளர்கள் மாற்றம் தொடர்வதால் சில வேட்பாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். வேட்பு மனுத் தாக்கல் முடிந்தபிறகுதான் வேட்பாளர்களுக்கு நம்பிக்கை வரும். இதன் காரணமாக வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யாமல் உள்ளனர் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x