Published : 30 Apr 2016 08:52 AM
Last Updated : 30 Apr 2016 08:52 AM

2006 தேர்தலின்போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: ஜெயலலிதா குற்றச்சாட்டு

அதிமுக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை' என்று திமுகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். 2006 திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன பல திட்டங்களை கருணாநிதி நிறைவேற்றவே இல்லை’ என்று அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா குற்றம்சாட்டியுள்ளார்.

விழுப்புரத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ஜெயலலிதா பேசியதாவது:

2011-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தல் அறிக்கையில் அறிவித்த 54 திட்டங்களை முழுமையாக நிறைவேற்றி யுள்ளேன். நீங்கள் எதிர்பார்க்காத திட்டங்களை நான் நிறைவேற்றியுள்ளேன். 'சொன்னதை செய்தேன். சொல்லாத பலவற்றையும் செய்தேன். அதிமுக அரசு எதுவுமே செய்யவில்லை என சொல்லி வரும் திமுகவினரை விரட்டியடியுங்கள்.

2006-ல் ஆட்சிக்கு வந்த திமுகவினர் பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்ற வில்லை. தமிழகத்தில் போதுமான குடியிருப்பு வசதி நிறைவேற்றப்படும், சென்னை, மதுரை, கோவை ,நெல்லையில் புதிய புறநகரங்கள் உருவாக்குவோம், தேசிய விளையாட்டு நிறுவனம் நிறுவுவோம், கிழக்கு கடற்கரைச் சாலை விரிவுபடுத்தப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளை கருணாநிதி அள்ளி விட்டார். அந்த திட்டங்களினால் தனக்கும், தன் குடும்பத்துக்கும் ஆதாயம் இல்லை என்றால் அதை செயல்படுத்தமாட்டார்.

கருணாநிதி நிறைவேற்றிய திட்டம் இலவச டி.வி. திட்டம். இந்த திட்டமே தன் குடும்பத்துக்கு வருவாய் வேண்டும் என்பதற்காகத்தான். தற்போது பல திட்டங்களை அறிவித்த கருணாநிதி குறைந்த கட்டணத்தில் கேபிள் கட்டணம் வழங்கப்படும் என சொல்லவில்லை. இப்படிச் சொன்னால் கருணாநிதி குடும்பத்துக்குள் சண்டை வரும்.

திமுக ஆட்சியில் எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம் இதைப்பற்றி தினகரன் பத்திரிக்கை செய்தி வெளியிட்டது. அ.ராசா, ஆற்காடு வீரசாமி உள்ளிட்டோர் மீது மோசமான செய்தி வெளியிட்டது. செய்தி வெளியிட்டவர்கள் மீது கோபப்பட்டு சன் டிவி நிறுவனத்தை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காலி செய்ய வைத்தார் கருணாநிதி. பின் எப்படி ஒன்றாக இணைந்தார்கள் என்பதை அவர்தான் விளக்க வேண்டும்.

தற்போது பலரும் மதுவிலக்கு பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். எனது தலைமையிலான அதிமுக ஆட்சி அமைத்தவுடன் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு, பூரண மதுவிலக்கு என்ற நிலை எட்டப்படும். மதுவிலக்கு பற்றி குழப்பமாக பேசி வாக்குகளை அபகரித்து விடலாம் என கருணாநிதி நினைத்தால் அது நிச்சயம் முடியாது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.

மேடையேறாத வேட்பாளர்கள்.

விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த 13 வேட்பாளர்கள் இக்கூட்டத்துக்கு வந்திருந்தனர். ஆனால் கூட்டத்தில் அவர்கள் பெயரை ஜெயலலிதா கூறவில்லை. மேலும் அவர்கள் மேடையும் ஏறவில்லை. அவர்களின் பெயரை சொன்னால் இந்த கூட்டத்தின் செலவு வேட்பாளர்களின் செலவு கணக்கில் சேர்க்கப்படும் என்பதால் இந்த திட்டம் என்றனர் அதிமுக பிரமுகர்கள்.

பெண் கை முறிந்தது

கடும் வெயிலில் மினி லாரியில் தொண்டர்கள் அழைத்து வரப்பட்டனர். பகல் 12 மணி முதல் தொண்டர்கள் கடும் வெயிலில் மாலை 5 மணி வரை காத்திருந்தனர். கூட்டநெரிசலில் சிக்கி வானூர் அருகேயுள்ள சாயல்மேடு கிராமத்தைச் சேர்ந்த ஜானகி என்ற பெண்ணுக்கு கை முறிந்தது. உடனடியாக அவரை விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x