

இந்தியாவில் 2 ஆயிரத்து 640 பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தைக்குத் தைராய்டு பாதிப்பு ஏற்படுகிறது என்று சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
350 மருத்துவர்கள் பங்கேற்பு
உலக தைராய்டு தினத்தை முன்னிட்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் தேசிய அளவிலான தைராய்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்த கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து 350 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். தைராய்டு மருத்துவத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் நோய் தொடர்பான விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்துவது குறித்து இந்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமைச்சர் சி.விஜய் பாஸ்கர் பேசியதாவது:
பொதுவாக உலகளவில் இந்தியர் கள்தான் தைராய்டால் அதிகம் பாதிக்கப் படுகிறார்கள். இந்தியாவில் பிறக்கும் 2 ஆயிரத்து 640 பச்சிளம் குழந்தைகளில் ஒரு குழந்தை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பெண்களும் அதிக அளவில் தைராய்டு நோயினால் பாதிக் கப்படுகிறார்கள். ஆரம்ப நிலையிலேயே மருத்துவப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் தைராய்டு பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள முடியும். இவ்வாறு அவர் பேசினார்.
மருத்துவ நிபுணர் அறிவுரை
இந்நிகழ்ச்சியில் பேசிய அப்பல்லோ மருத்துவமனையின் நீரிழிவு துறை தலைமை மருத்துவர் ஜெயகோபால், “பெண்கள் தாங்கள் கருவுற்ற 6வது வாரத்திலேயே மருத்துவர்களிடம் சென்று தைராய்டு பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
உலகளவில் தைராய்டு நோயை தடுக்கப் பல்வேறு நாடுகளின் அரசுகள் திட்டம் வைத்துள்ளது. ஆனால் இந்திய அளவில் தைராய்டு நோய் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ள திட்டங்கள் வகுக்கப்படாமல் உள்ளது” என்றார்.