

வேலூர் மாநகராட்சி தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப் பட்டுள்ளதை தொடர்ந்து மாநக ராட்சி கவுன்சிலர் கூட்டரங்கு சீரமைக்கப்பட்டு வருகிறது.
வேலூர் மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 2 நகராட்சிகள், 4 பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், 60 வார்டுகள் கொண்ட வேலூர் மாநகராட்சியில் 44 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக வேலூர் மாநகராட்சியை கைப் பற்றியுள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
அதிமுக 7 வார்டுகளிலும், சுயேச்சை 6 இடங்களிலும், பாமக, பாஜக தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவியேற்பு விழா மார்ச் 2-ம் தேதி காலை 11 மணிக்கு வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடை பெறுகிறது.
இதையொட்டி, வேலூர் மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கு சீரமைக்கும் பணிகள் நேற்று நடைபெற்றன. மேலும், மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் அறைகளும் தயார் படுத்தும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் நேற்று முதல் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர மாநகராட்சி அலுவலக கட்டிடம் முழுவதும் புதிதாக வர்ணம் தீட்டும் பணிகள் நடைபெற்று வருகிறன.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறுகை யில், ‘‘வேலூர் மாநகராட்சியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் வரும் 2-ம் தேதி காலை பதவி ஏற்கின்றனர். இதனைத்தொடர்ந்து, 4-ம் தேதி மேயர் மற்றும் துணை மேயர் பதவிக்கான மறைமுக தேர்தலும் நடைபெற உள்ளது.
மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள கவுன்சிலர் கூட்டரங்கு புதுப்பொலி பெறும் பணிகள் நடந்து வருகிறது. மேயர், துணை மேயர் அறைகளும் தயார் செய்து வருகிறோம். மாநகராட்சி கட்டிடம் முழுவதும் வண்ணம் தீட்டும் பணிகள் நடந்து வருகிறது.
மார்ச் 2-ம் தேதிக்குள் மாநகராட்சி அலுவலகம் புத்தம் புதிதாக காட்சியளிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது’’ என்றார்.