

மதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் 99 வார்டுகளில் போட்டியிட்ட பாஜக, 88 வார்டுகளில் டெபாசிட் இழந்துள்ளது.
100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சி தேர்தலில் 99 இடங்களில் பாஜக போட்டியிட்டது. இதில் 86-வது வார்டில் பாஜக வேட்பாளர் பூமா வெற்றிப்பெற்றார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை விட கூடுதலாக 75 வாக்குகள் பெற்றார்.
மதுரை மாநகராட்சி தேர்தலில் 84-வது வார்டில் பாஜக போட்டியிடவில்லை. 99 வார்டுகளில் ஒரு வார்டில் பாஜக வெற்றிப்பெற்ற நிலையில், 88 வார்டுகளில் டெபாசிட் இழந்தது. 9, 26, 44, 46, 47, 48, 52, 65, 85, 94 ஆகிய வார்டுகளில் மட்டும் டெபாசிட் தொகையை பாஜக திரும்ப பெற்றுள்ளது.
பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்ட 11 வார்டுகளில் 2-ம் இடமும், 51 வார்டுகளில் 3-ம் இடமும், ஒரு வார்டில் 4-வது இடத்தையும் பிடித்துள்ளனர். 18 வார்டுகளில் 500-க்கும் குறைவான வாக்குகளே பாஜகவுக்கு கிடைத்துள்ளன.
நாம் தமிழர் கட்சி 5 வார்டுகளிலும், மக்கள் நீதி மய்யம் 4 வார்டுகளிலும், அமமுக 2 வார்டுகளிலும், தேமுதிக ஒரு வார்டிலும் 3-ம் இடத்தை பிடித்துள்ளன.