Published : 23 Feb 2022 06:01 AM
Last Updated : 23 Feb 2022 06:01 AM

இரவுநேரத்தில் செயல்படும் உணவகங்களை விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

சென்னை: இரவு நேர உணவகங்களை குறிப்பிட்ட நேரத்துக்குள் விரைவாக மூடும்படி கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கீழ்ப்பாக்கம் ஆர்ம்ஸ் சாலையில் உள்ள இரவுநேர துரித உணவகத்தின் அன்றாடசெயல்பாடுகளில் போலீஸார் குறுக்கிட்டு இடையூறு செய்வதாகவும், இது தங்களது அடிப்படை உரிமையைப் பாதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி அந்த உணவக உரிமையாளர் எஸ்.குணராஜாஎன்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

தொந்தரவு தரும் போலீஸார்

அதில், ‘‘கடந்த 11 ஆண்டுகளாக இப்பகுதியில் இரவுநேர சைவ துரித உணவகம் நடத்தி வருகிறேன். ஆனால் கடந்த சில மாதங்களாக போலீஸார் இரவு 10.30 மணிக்குள் எனது உணவகத்தை மூடும்படி கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கு மேல் உணவகத்தை திறக்கக்கூடாது என கடுமையான சொற்களால் வாடிக்கையாளர்களின் முன்னிலையிலேயே எச்சரித்துசெல்கின்றனர். போலீஸாரின் தொந்தரவால் எனது வணிகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

எனது கடைக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் நள்ளிரவு நேரங்களில்தான் வருகின்றனர். எனவே அதிகாலை 1.30 மணி வரைஎனது கடையை திறந்து வியாபாரம் செய்ய அனுமதிக்கும்படி போலீஸ் உயரதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே எனது இரவுநேரதுரித உணவகத்தை அதிகாலை வரை திறந்து வைத்து வியாபாரம்செய்ய அனுமதிக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். கடையை மூடும்படி போலீஸார் கட்டாயப்படுத்தக் கூடாது என்று உத்தரவிட வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகிருஷ்ணன் ராமசாமி முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமும், அரசு தரப்பி்ல் வழக்கறிஞர் எம்.ஷாஜகானும் ஆஜராகி வாதிட்டனர்.

அப்போது அரசு தரப்பில் ‘‘இரவு நேரங்களில் சட்டம் - ஒழுங்குபிரச்சினை மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டே இரவு நேரங்களில் உணவகங்கள் உள்ளிட்ட கடைகளை விரைவாக மூடும்படி போலீஸார் எச்சரித்து அறிவுறுத்துகின்றனர். இந்த உத்தரவும் வாய்மொழியாகவே பிறப்பிக்கப்படுகிறது’’ என தெரிவிக்கப் பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

பொதுமக்களுக்கு உரிமை

சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் அதைத் தடுத்து பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் போலீஸாருக்கு உள்ளது. ஆனால் அதையே காரணம் காட்டி இரவு நேரங்களில் உணவகம் நடத்தி பிழைப்பு நடத்தும் வியாபாரிகளை, கடையை மூடும்படி மிரட்டுவது ஏற்புடையதல்ல.

பொதுமக்கள் தாங்கள் விரும்பும் உணவு வகைகளை எந்நேரமும் சாப்பிட அவர்களுக்கு அரசியலமைப்பு சட்டப்பிரகாரம் பிரிவு 21-ன் கீழ் அடிப்படை உரிமை உள்ளது. எனவேஇரவு நேரங்களை மையமாக வைத்து வியாபாரம் செய்யும் உணவகங்களை விரைவாக மூடும்படி போலீஸார் கட்டாயப்படுத்த முடியாது. அவ்வாறு கட்டாயப்படுத்த போலீஸாருக்கு அதிகாரமில்லை.

ஏனெனில் சட்டப்பிரிவு 19(1)(ஜி) பிரகாரம் ஒருவருக்கு தனது கடையைத் திறந்து வைக்கும் சுதந்திரமும், அதை அணுகும் உரிமை பொதுமக்களுக்கும் உள்ளது. தமிழக அரசின் சட்டப்படி உணவகங்கள் திறக்க வேண்டிய மற்றும் மூட வேண்டிய நேரத்தை போலீஸார் தீர்மானிக்க முடியாது. அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது. அரசு அறிவிப்பின்படி உணவகங்கள் தொடர்ந்து செயல்பட எந்த தடையும் இல்லை.

சட்ட விரோதமாக நடந்தால்...

இரவு நேரங்களில் பணிக்குச்செல்லும் தனியார் நிறுவன ஊழியர்கள், இரவு காவலர்கள், வாகனஓட்டிகளின் உணவுத் தேவையைபூர்த்தி செய்யவே இரவு நேரக்கடைகள் செயல்படுகின்றன. சட்டம் - ஒழுங்கு பிரச்சினையைக் காரணம் காட்டி அந்த உணவகங்களுக்கு போலீஸார் தொந்தரவு செய்யக் கூடாது. அதேநேரம் இரவுநேர உணவகங்களில் சட்டவிரோத செயல்பாடுகள் நடைபெற்றால் போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கலாம்.

இவ்வாறு உத்தரவில் கூறப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x