

சென்னை: தமிழகத்தில் நடந்த நகர்ப்புற உள் ளாட்சித் தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியதுடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சி களையும் பிடித்துள்ளது.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளில் உள்ள 12,607 வார்டுகளுக்கு கடந்த 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நேற்று எண்ணப்பட்டன. தொடக்கத்தில் இருந்தே திமுக வேட்பாளர்கள் முன்னிலை வகித்தனர். அதன்பின் தொடர்ந்து பெரும்பாலான வார்டுகளில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற வண்ணம் இருந்தனர்.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சி களையும் திமுக கைப்பற்றியுள்ளது. அத்துடன் பெரும்பாலான நகராட்சிகள், பேரூராட்சிகளையும் பிடித்துள்ளது. திமுகவின் அமோக வெற்றியால் உற்சாகம் அடைந்த தொண்டர்கள் சாலைகளில் பட்டாசு வெடித்தும், மக்களுக்கு இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப் படுத்தினர்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திரண்ட திமுகவினர், நடனமாடியும் வெற்றிக் கோஷங்களை எழுப்பியும் உற்சாகமாக வெற்றியை கொண்டாடினர். நேற்று மாலை அறிவாலயத்துக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கு திரண்டிருந் தவர்களுக்கு வாழ்த்து தெரி வித்தார்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் திமுக குறிப்பிடும்படியாக வெற்றி பெறவில்லை. ஆனால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் பெரும்பாலான உள்ளாட்சிகளை திமுக தன் வசப்படுத்தி உள்ளது. கொங்கு மண்டலம் மட்டுமின்றி, பெரும்பாலான மாவட்டங்களில் அதிமுகவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.
மாநகராட்சிகளில் திமுக 948, அதிமுக 164, காங்கிரஸ் 73, மார்க்சிஸ்ட் 24, பாஜக 22, இந்திய கம்யூனிஸ்ட் 13, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 125 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளன.
நகராட்சிகளில் திமுக 2,360, அதிமுக 638, காங்கிரஸ் 151, பாஜக 56, மார்க்சிஸ்ட் 41, இந்திய கம்யூனிஸ்ட் 19, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 526 வார்டுகளிலும், பேரூராட்சிகளில் திமுக 4,388, அதிமுக 1,206, காங்கிரஸ் 368, பாஜக 230, மார்க்சிஸ்ட் 101, இந்திய கம்யூனிஸ்ட் 26, இதர கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் 1,260 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு நிகழ்ச்சிகள் மார்ச் 2-ம் தேதி நடக்கிறது. மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணைத் தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் மார்ச் 4-ம் தேதி நடக்க உள்ளது.