

சென்னை: தேசிய கல்விக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்ப்பது ஏன் என்பது குறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பொன்முடி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர்பொன்முடி நேற்று வெளியிட்டசெய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக்கொள்கை குறித்து மாநில அரசின் நிலைப்பாடு கோரும் மத்திய அரசின் மின்னஞ்சல், தமிழக அரசுக்கு கடந்த 18-ம் தேதி கிடைத்தது.
இது தொடர்பாக கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்தைப் பெற்று, விரிவாக ஆய்வுசெய்வதற்கு அரசுக்கு குறைந்த அவகாசமே அளிக்கப்பட்டுள்ளது. எனவே, வரைவு செயலாக்கத் திட்டம் குறித்து ஆய்வு செய்து,அரசின் நிலைப்பாடு அனுப்பப்படும்.
தேசிய கல்விக்கொள்கை, அனைவருக்கும் கல்வி என்ற தமிழகத்தின் நிலைப்பாட்டை சீர்குலைக்கும் வகையில் இருப்பதால், தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு அதை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.
பட்டப் படிப்பு படிக்க முதல்நிலை தகுதிகளை மாணவர்கள் நிறைவு செய்திருக்க வேண்டும் என்று வரைவுக் கொள்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது, தமிழகஅரசின் கொள்கைக்கு ஏற்புடையதல்ல.
கலை, அறிவியல் கல்லூரிகளில் பட்டப் படிப்பு படிக்க நுழைவுத்தேர்வு கட்டாயம் என்பதை திமுக தொடர்ந்து கண்டித்து வருகிறது.
தற்போதைய தேசிய கல்விக்கொள்கையின்படி 3 ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், 2-ம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், 3 ஆண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை ஊக்குவிக்கும் என்பதால், அதை தமிழக அரசு எதிர்க்கிறது.
மூன்று ஆண்டு இளநிலை பட்டப் படிப்பே அரசின் நிலைப்பாடாக இருக்கும்போது, உயர்கல்வி வரைவுத் திட்டம் 4 ஆண்டுஇளநிலை பட்டத்தை பரிந்துரைக்கிறது. இது மாணவர்களின் படிப்புக் காலத்தை மேலும் ஓராண்டு நீட்டிக்கிறது.
மேலும், முதல் 3 ஆண்டுகளில் சராசரி ஒட்டுமொத்த தரப்புள்ளி (CGPA) 7.5-க்கும் குறைவாக பெற்றிருக்கும் மாணவர்கள், 4-ம் ஆண்டு செல்ல இயலாது என்பது இயற்கை நீதிக்குப் புறம்பானது.
வரைவுக் கொள்கையின்படி, ஒரு பருவத்தின் (செமஸ்டர்) அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சிப் பெறாத மாணவர்கள், அடுத்தபருவத்துக்கு அனுமதிக்கப்படாமல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவது மாணவர்களின் கற்கும் காலத்தை நீட்டிப்பதுடன், இடைநிற்றலை அதிகரிக்கும்.
மத்திய அரசு அறிமுகப்படுத்த விரும்பும் புதிய கல்வி முறை, நீட் தேர்வு முறையைவிடக் கொடுமையானது. 100 ஆண்டுகாலமாக உழைத்து உருவாக்கிய கல்வி அமைப்பையே சீர்குலைக்கும் செயல். இது ஏழை, விளிம்புநிலை மாணவர்களின் நலனுக்குஎதிரானது என்பதால் எதிர்க்கிறோம்.
மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கென ஒரு குழு அமைக்கப்படும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்புக்கு இணங்க, அதற்கான பணிகளும்நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார்.