Published : 23 Feb 2022 08:17 AM
Last Updated : 23 Feb 2022 08:17 AM

‘0’ வாக்கு, ‘ஒரு’ வாக்கு, குலுக்கலில் வந்த ஜாக்பாட்: வேட்பாளர்களுக்கு கிடைத்த அதிர்ச்சி, விரக்தி, அதிர்ஷ்டம்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர்கள் சிலருக்கு ஒருவாக்கு கூட கிடைக்காமல் மக்கள் அதிர்ச்சி அளித்தனர், சிலருக்கு ஒருவாக்கில் வெற்றியும், ஒருவாக்கு மட்டுமேயும் கிடைத்தன. மேலும் குலுக்கல் முறையில் சிலருக்கு அதிர்ஷ்டம் காத்திருந்தது.

ஒரு வாக்கு வெற்றி

கரூர் மாவட்டம் பழையஜெயங் கொண்டம் பேரூராட்சி 3-வது வார்டில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வென்றார். இங்கு 3-வது வார்டில் பாஜக வேட்பாளர் கோபிநாத்துக்கு 174 வாக்குகளும், திமுக வேட்பாளர் சுரேஷூக்கு 173 வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பாஜக வேட்பாளர் கோபிநாத் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஒரு வாக்கு வேட்பாளர்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பேரூராட்சியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஒருவாக்கு பெற்றார். இங்கு மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இவற்றில் 2 வார்டுகளில் பாஜக வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில், 11-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்ட ராமசாமி ஒரு வாக்கு மட்டும் பெற்று டெபாசிட் தொகையை இழந்தார்.

குலுக்கலில் அடித்த ஜாக்பாட்

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி பேரூராட்சியில் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளரை வீழ்த்தி பாஜக வேட்பாளர் வென்றார். இங்கு, 4-வது வார்டில் அதிமுக சார்பில் உஷா, பாஜக சார்பில் மனுவேல், திமுக சார்பில் ஜெயராஜ் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாக போட்டியிட்டனர். இவர்களில் அதிமுக வேட்பாளரும், பாஜக வேட்பாளரும் தலா 266 வாக்குகளுடன் சமநிலையை பெற்றிருந்தனர். திமுக வேட்பாளர் 265 வாக்குகளுடன் ஒரு வாக்கு வித்தியாசத்தில் பின்னடைவை சந்தித்திருந்தார்.

இதையடுத்து, குலுக்கல் முறையில் வெற்றி பெற்றவரைத் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில், பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றார்.

இதேபோன்று, பழநி நகராட்சி 12-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சின்னத்தாய், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் போட்டியிட்ட முருகேஷ் ஆகியோர் தலா 500 வாக்குகள் பெற்றதால் குலுக்கல் முறையில் நடந்த தேர்வில் விசிக வேட்பாளர் முருகேஷ் வென்றார்.

இதேபோன்று, ஈரோடு மாநகராட்சி 54-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.பாரதியும் சுயேச்சையாக போட்டியிட்ட பானுலட்சுமியும் தலா 1,037 வாக்குகள் பெற்றனர். மாநகராட்சி ஆணையர் சிவகுமார் முன்னிலையில் நடந்த குலுக்கலில், அதிமுக வேட்பாளர் சி.பாரதி வெற்றி பெற்றார்.

பூஜ்யம் பெற்றவர்கள்

விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் பேரூராட்சியில் பாஜக வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு கூட பெறவில்லை. இங்கு 10-வது வார்டில் வசித்து வரும் நிரோஷா என்பவர், 6-வது வார்டில் பாஜக சார்பில் போட்டியிட்டார். இவர் ஒரு வாக்குக் கூட பெறவில்லை.

சுயேச்சையாக போட்டியிட்ட மஞ்சுளா பாஜக வேட்பாளர் நிரோஷாவின் உறவினர். அதனால், பாஜக வேட்பாளர் வாக்குகள் அப்படியே மஞ்சுளா வசம் சென்றுவிட்டன. மேலும் பாஜக வேட்பாளர் நிரோஷாவுக்கு, தான் போட்டியிட்ட வார்டில் வாக்கு இல்லை. இந்த காரணங்களால் அவர் பூஜ்ய வாக்கு பெற்றுள்ளார்.

இதேபோன்று, புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஒருவாக்கு கூட பெறாதது அக்கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இங்கு 7-வது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பிரிதிவிராஜ் (175 வாக்குகள்) வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ப.பரூக் (149 வாக்குகள்) 2-ம் இடம் பிடித்தார். அதேநேரத்தில், அதிமுக வேட்பாளர் முகமது இப்ராம்சாவுக்கு ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை. இப்ராம்சா குடும்பத்தினருடன் அதே வார்டில் வசித்தும் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

இதேபோல, அரியலூர் மாவட்டம் வரதராஜன்பேட்டை பேரூராட்சி 5-வது வார்டில் அதிமுக சார்பில் நின்ற அடைக்கலமேரிக்கும் ஒரு வாக்கு கூட கிடைக்கவில்லை.

இதேபோன்று, சிவகங்கை நகராட்சியில் 1-வது வார்டில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் செங்கோல் ஒரு வாக்குகூட பெறவில்லை. அவருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் 18-வது வார்டில் வாக்கு உள்ளது. இதனால் அவர்களால் செங்கோலுக்கு வாக்களிக்க முடியவில்லை. மேலும் முன்மொழிந்தவர் விபத்தில் காயமடைந்ததால் வாக்களிக்கவில்லை. செங்கோல் கூறுகையில், ‘எங்கள் கட்சியினர் 1-வது வார்டில் அதிகளவில் இருந்ததால் போட்டியிட்டேன். எதனால் எனக்கு வாக்களிக்கவில்லை என தெரியவில்லை’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x