Published : 23 Feb 2022 07:56 AM
Last Updated : 23 Feb 2022 07:56 AM
கோவை: கோவையில் மாநகராட்சி உள்ளிட்ட 40 உள்ளாட்சி அமைப்புகளை திமுக கைப்பற்றி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
அதிமுகவின் கோட்டை எனக் கருதப்படும் கோவை மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது 10 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வென்றனர். இதைத் தொடர்ந்து கோவையில் திமுகவை பலப்படுத்தவும், வளர்ச்சித் திட்டப்பணிகளை கண்காணிக்கவும் பொறுப்பு அமைச்சராக வி.செந்தில்பாலாஜி நியமிக்கப்பட்டார். அவர் கோவையில் சுற்றிச் சுழன்று பணியாற்றி கட்சியில் உள்ள பலவீனங்களை மதிப்பிட்டு, அவற்றை களையும் பணியில் கவனம் செலுத்தினார்.
இச்சூழலில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. கோவையில் ஒரு மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் என 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு 802 கவுன்சிலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிகளில் கோவையைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுக்கு பதில், கரூரைச் சேர்ந்த திமுகவினரை களத்தில் இறக்கினார் அமைச்சர் செந்தில்பாலாஜி.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 41 உள்ளாட்சி அமைப்புகளுக்கு பல்வேறு கட்சியினர், சுயேச்சைகள் என 3,366 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் மற்ற இடங்களில் திமுக வென்றாலும், கோவையில் அதிமுகவுக்கே வெற்றி கிடைக்கும் என பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஒரு பேரூராட்சியை தவிர, 100 வார்டுகளைக் கொண்ட கோவை மாநகராட்சி, 7 நகராட்சிகள், 32 பேரூராட்சிகளை கைப்பற்றியது திமுக.
கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளில், கவுண்டம்பாளையம் தொகுதியில் 22 வார்டுகள், கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர் தொகுதிகளில் தலா 19 வார்டுகள், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கோட்டை எனப்படும் தொண்டாமுத்தூர் தொகுதியில் 14 வார்டுகள், கிணத்துக்கடவு தொகுதியில் 7 வார்டுகள் வருகின்றன. அதிமுக பலமுள்ள இப்பகுதிகளில், எளிதாக வெல்வர் என எதிர்பார்க்கப்பட்ட அதிமுக வேட்பாளர்கள் பலரும் தற்போது தோல்வியைத் தழுவியுள்ளனர். நேற்றிரவு 9.30 மணி நிலவரப்படி கோவை மாநகராட்சியில் 90 இடங்கள், நகராட்சிகளில் 167 இடங்கள், பேரூராட்சிகளில் 408 இடங்கள் என கோவை மாவட்டத்தில் திமுக கூட்டணி பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது.
கோவை மாநகராட்சியில் 3 வார்டுகள், 33 பேரூராட்சிகளில் 71 வார்டுகள், 7 நகராட்சிகளில் 23 வார்டுகள் என மொத்தம் 97 இடங்களில் மட்டுமே அதிமுக கைப்பற்றி இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை தழுவியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT