

கோவை மாவட்டத்தில் மொத்த முள்ள 33 பேரூராட்சிகளில் 504 கவுன்சிலர்களை தேர்வு செய்ய தேர்தல் நடந்தது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர், அதிமுக, பாஜக, மநீம, நாம் தமிழர், அமமுக, தேமுதிக, சுயேச்சைகள் என பலரும் போட்டியிட்டனர்.
இதில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் 400 இடங்களில் வெற்றி பெற்றனர். அதிமுக 71 வார்டுகளில் வெற்றிபெற்றது.
குறிப்பாக, அன்னூர், இருகூர், ஜமீன் ஊத்துக்குளி, ஒடையகுளம், சமத்தூர், சூளேஸ்வரன் பட்டி, செட்டிபாளையம், மோப்பிரிபாளையம் ஆகிய 8 பேரூராட்சிகளில் ஒரு இடங்களில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை.
இப்பேரூராட்சிகளில் 5 இடங்களில் மட்டுமே பாஜகவினர் வெற்றி பெற்றனர். ஆனைமலை, இருகூர், கோட்டூர், சூலூர், பெரியநாயக்கன் பாளையம், வெள்ளலூர், வேட்டைக்காரன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி, ஒத்தக்கால் மண்டபம், ஒடையகுளம், கண்ணம்பாளை யம், கிணத்துக்கடவு, சமத்தூர்,எஸ்.எஸ்குளம், சூளேஸ்வரன் பட்டி, தாளியூர், நரசிம்மநாயக்கன் பாளையம், பள்ளபாளையம், பெரிய நெகமம், பேரூர், வேடபட்டி, நம்பர் 4 வீரபாண்டி, ஆலாந்துறை, இடிகரை, எட்டிமடை, திருமலையாம்பாளையம், தென்கரை, தொண்டாமுத்தூர், மோப்பிரி பாளையம், ஆகிய 29 பேரூராட்சி களில் ஓர் இடத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.
அதேபோல, 33 பேரூராட்சி களிலும் தேமுதிக, அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சியினர் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.
27-ல் சுயேச்சைகள் வெற்றி
கோவை மாவட்ட பேரூராட்சிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் மட்டும் 27 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். மோப்பிரிபாளையத்தில் 10 பேர்,அன்னூரில் 4 பேர், கண்ணம் பாளையம், செட்டிபாளையத்தில் தலா 2 பேர், கோட்டூர், சிறுமுகை, வெள்ளலூர், வேட்டைக் காரன்புதூர், ஜமீன் ஊத்துக்குளி, ஆலாந்துறை, கிணத்துக்கடவு ஆகிய பேரூராட்சிகளில் தலா ஒருவர் என 27 இடங்களில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.