

சென்னை: சென்னை மாநகராட்சியை 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக கைப்பற்றியுள்ளது. சென்னை மாநகராட்சியில் 200வார்டுகள் உள்ளன. இந்த வார்டு உறுப்பினர்கள் பதவிகளை பிடிக்க2,670 பேர் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதிநடந்தது. பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் பகுதி வாக்குச்சாவடி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த மின்னணுவாக்குப்பதிவு இயந்திரம் சேதப்படுத்தப்பட்டது. அதேபோல, பழைய வண்ணாரப்பேட்டை கல்லறை தெருவில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக புகார் எழுந்தது. இந்த 2 வாக்குச்சாவடிகளிலும் கடந்த 21-ம் தேதி மறுவாக்குப்பதிவு நடந்தது. தமிழகத்திலேயே மிகக் குறைந்த அளவாக சென்னையில் 43.59 சதவீதம் வாக்குகள் பதிவாயின.
வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் 15 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
நேற்று வாக்கு எண்ணும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார்.
மொத்தம் உள்ள 200 வார்டுகளில் திமுக 153 இடங்களிலும், அதிமுக 15, காங்கிரஸ் 13, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா 4, மதிமுக 2, இந்திய கம்யூனிஸ்ட், பாஜக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், அமமுக தலா 1, சுயேச்சைகள் 5 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.
வெற்றி பெற்ற வேட்பாளர்களை அவர்களது ஆதரவாளர்கள் தலைக்கு மேல் தூக்கி ஊர்வலமாக சென்றும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி மகிழ்ந்தனர்.
வரும் மார்ச் 2-ம் தேதி உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையில் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து மார்ச் 4-ம் தேதி மேயர், துணை மேயர் தேர்தல் நடைபெற உள்ளது.