

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாநகராட்சியில் நகரச் செயலாளர் ராஜா 27-வது வார்டிலும், அவரது மனைவி சுந்தரி 20-வது வார்டிலும் போட்டியிட்டனர். இதில் ராஜா தோல்வியை தழுவ அவரது மனைவி சுந்தரி வெற்றி பெற்றார்.
விருத்தாசலம் நகராட்சியில் திமுக நகரச் செயலாளர் தண்டபாணி 21-வது வார்டிலும், அவரது மனைவி ராணி 28-வது வார்டிலும் போட்டியிட்டனர். இதில் தண்டபாணி தோல்வியைத் தழுவ, மனைவி ராணி மட்டுமே வெற்றி பெற்றார்.
33 வார்டுகளைக் கொண்ட பண்ருட்டி நகராட்சியில் திமுக நகரச் செயலாளரான ராஜேந்திரன் 26-வது வார்டிலும், அவரது மனைவி கஸ்தூரி 22-வது வார்டிலும் போட்டியிட்டனர். இதில் கஸ்தூரி தோல்வியை தழுவ, ராஜேந்திரன் மட்டும் வெற்றி பெற்றார்.
15 வார்டுகளைக் கொண்ட பெண்ணாடம் பேரூராட்சியில் திமுக சார்பில் 11-வது வார்டில் போட்டியிட்ட குமரவேலு வெற்றி பெற்ற நிலையில், 5-வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி வசந்தி தோல்வியைத் தழுவினார்.
இதேபோன்று 18 வார்டுகள் கொண்ட பரங்கிப்பேட்டைப் பேரூராட்சியில் முன்னாள் அதிமுக அமைச்சரான செல்வி ராமஜெயத்தின் மகன் சந்தர் தோல்வியை தழுவ, 16-வது வார்டில் போட்டியிட்ட அவரது மனைவி இந்துமதி வெற்றி பெற்றார்.
கணவன்-மனைவி சகிதமாக போட்டியிட்ட மேற்கண்ட இடங்களில் எவரேனும் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றதால் திமுக மற்றும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சியை மறைமுகமாக கொண்டாடினர். ஒரு சில ஜோடிகளிடம் மகிழ்ச்சியும் வருத்தமும் ஒரு சேர இருப்பதை காண முடிந்தது. இன்னும் சில இடங்களில் ‘இரண்டில் ஒன்று வெற்றி பெற்றால் போதும்’ என்ற மனநிலையில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.