

திருச்சி மாவட்டம் துவாக்குடி நகராட்சி 5-வது வார்டில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இவர்களில் சுயேச்சை வேட் பாளராக போட்டியிட்ட கல்லூரி மாணவியான செ.சினேகா என்பவர் 495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்டவர்களில் அமமுக வேட்பாளர் த.சிவக்குமார் மட்டுமே டெபாசிட் தொகையை தக்க வைத்தார். அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சி களின் வேட்பாளர்கள் டெபாசிட் தொகையை இழந்தனர்.
இதுகுறித்து மாணவி சினேகா கூறும்போது, “திருச்சி சிறுக னூரிலுள்ள எம்ஏஎம் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறேன். எனது தந்தை செல்வம் இப்பகுதிக்கு மக்களுக்குச் செய்யக்கூடிய சமூக சேவையால் ஈர்க்கப்பட்டு, அரசியலுக்குள் வர நினைத்தேன். எங்கள் குடும்பத்தினருக்கு இப்பகுதி மக்களிடம் நல்ல பெயர் இருப்பதால், அவர்களின் ஒத்துழைப்புடன் இந்த வார்டில் போட்டியிட்ட அரசியல் கட்சி களின் வேட்பாளர்களை தோற்கடித்தேன். இந்த வார்டில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டா கிடைக்காமல் அவதிப்படும் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கு பட்டா பெற்றுத்தர முன்னுரிமை அளித்து செயல்படுவேன்” என்றார்.