

திருச்சி மாநகராட்சி ஆனதில் இருந்து நடத்தப்பட்டுள்ள 5 தேர்தல்களிலும் திமுக வேட்பாளர் மு.அன்பழகன் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்.
நகராட்சி நிலையிலிருந்த திருச்சி கடந்த 1994-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதற்குப்பின் 1996-ம் ஆண்டு நடைபெற்ற முதல் உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி 2001, 2006, 2011, 2022 என தற்போது வரை 5 உள்ளாட்சித் தேர்தல்களை திருச்சி மாநகராட்சி சந்தித்துள்ளது. இவை அனைத்திலுமே திமுக வேட்பாளராக போட்டியிட்டு, தொடர்ந்து வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் திருச்சி மாநகர திமுக செயலாளரான மு.அன்பழகன்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்' நாளிதழிடம் அவர் கூறியதாவது:
1980-ம் ஆண்டு திமுகவில் இணைந்த நான், 1990 முதல் 1999 வரை திருச்சி மாநகர திமுக இளைஞரணி அமைப்பாளராக இருந்துள்ளேன். மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பிறகு 1996-ல் நடத்தப்பட்ட முதல் தேர்தலில் முதலியார்சத்திரம் பகுதிகள் அடங்கிய அப்போதைய 26-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதன்பின் 1999-ல் எனக்கு திமுக மாநகரச் செயலாளர் பொறுப்பு தரப்பட்டது. 2001 உள்ளாட்சித் தேர்தலிலும் அதேவார்டில் போட்டியிட்டு வென்றேன். அப்போது அதிமுக ஆளுங்கட்சியாக இருந்த நிலையிலும், மாநகராட்சி மாமன்றத்தில் நடைபெற்ற மறைமுக தேர்தலில் போட்டியிட்டு முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையைத் தோற்கடித்து துணைமேயர் பதவியைக் கைப்பற்றினேன்.
அடுத்ததாக 2006-ல் நடைபெற்ற தேர்தலில் பழைய 47-வது வார்டில் வெற்றி பெற்று, திமுக ஆட்சி காலத்தில் துணைமேயராக பொறுப்பேற்றேன். அதைத்தொடர்ந்து 2011 தேர்தலின்போது, அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கில் கைதாகி மத்திய சிறையிலிருந்தபடி பழைய 32-வது வார்டில் போட்டியிட்டு, பிரச்சாரத்துக்கே போகாமல் வெற்றி பெற்றேன்.
தற்போது 27-வது வார்டில் போட்டியிட்ட என்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினின் சிறப்பான ஆட்சியாலும், அமைச்சர் கே.என்.நேரு மீதான நம்பிக்கையாலும் மக்கள் 4,819 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துள்ளனர். என்னை எதிர்த்து நின்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்துள்ளனர். திருச்சி மாநகராட்சி வரலாற்றில் தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்றுள்ள ஒரே வேட்பாளர் நான் மட்டுமே. என்னைத் தேர்வு செய்த வார்டுக்கு பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்து, மாநகரின் முன்மாதிரி வார்டாக மாற்றுவேன் என்றார்.
ஏற்கெனவே 2 முறை துணைமேயராக இருந்த மு.அன்பழகனுக்கு, இம்முறை மேயர் பதவியைப் பெற்றுத்தர முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரைத்துள்ளதாக தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் கே.என்.நேரு கூறியிருந்தார். இதன்காரணமாக அன்பழகனுக்கு இம்முறை மேயர் வாய்ப்பு கிடைக்கும் என திமுக வட்டாரங்களில் கூறப்படுகிறது.