

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து, ராசிபலனுடன் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை தமிழக தேர்தல் துறை வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேவைத் தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் 31 நாட்கள் உள்ளன. இதற்கிடையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவை முன்னிறுத்தி, தமிழக தேர்தல் துறை பணியாற்றி வருகிறது.
கடந்த தேர்தல்களில் வாக்குப் பதிவு சதவீதம் குறைந்த பகுதிகளை கணக்கெடுத்துள்ள தேர்தல் துறை, அப்பகுதி மக்களிடம் தேர்தல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த சிறப்பு குழுக்களை உருவாக்கியுள்ளது.
மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், பஸ் நிறுத்தங்கள் போன்றவற்றில் விழிப்புணர்வு போஸ்டர்கள், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. விழிப்புணர்வு நாடகங்கள் உள்ளிட்டவையும் நடத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தை பொறுத்தவரை வாக்காளர்களில் 23 சதவீதம் பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். அவர்கள் மத்தியில் வாக்களிப்பதன் அவசியத்தை உணர்த்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப் போன்றவற்றின் மூலமும், தேர்தல் துறை பல்வேறு வகைகளில் பிரச்சாரம் செய்துவருகிறது.
குறிப்பாக, வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாட்ஸ் அப்பில், ‘மீம்ஸ்’கள் மூலம் தேர்தல் துறை, அன்றாட நிகழ்வுகளின் அடிப்படையில் விளக்கி வருகிறது. நேற்று தமிழ்ப் புத்தாண்டு என்பதால், புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளதுடன், மே 16-ம் தேதி தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், ராசிபலன் கூறுவது போலவே மே 16-ம் தேதி வாக்களிக்க வேண்டும் என புதிய ‘மீம்ஸ்’ நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதுபோல் தினசரி புதிது புதிதாக தேர்தல் துறையின் தகவல் தொழில்நுட்ப பிரிவினர் ஏதேனும் செய்துகொண்டே இருக்கின்றனர்.
இது தொடர்பாக தேர்தல் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தேர்தல் வாக்குப் பதிவு நடக்கும் வரை, வாக்காளர்களிடம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி நடக்கும். அன்றாட நிகழ்வுகள் அடிப்படையில் ‘மீம்ஸ்’கள் பதிவிடப்படுகின்றன’’ என்றார்.