Published : 23 Feb 2022 06:34 AM
Last Updated : 23 Feb 2022 06:34 AM

நெல்லை உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் 3 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது திமுக: நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் முழுமையாக ஆதிக்கம்

திருநெல்வெலி உள்ளிட்ட 4 தென் மாவட்டங்களில் உள்ள 3 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளிலும் திமுகவினரே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி மாநகராட்சி, அம்பாசமுத்திரம், வி.கே.புரம், களக்காடு நகராட்சிகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் அதிக இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சியில் மொத்த முள்ள 55 வார்டுகளிலும் திமுக 44, அதிமுக 4, காங்கிரஸ் 3, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், சுயேச்சை தலா 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

அம்பாசமுத்திரம் நகராட்சியில் மொத்தமுள்ள 21 வார்டுகளில் திமுக 14, அதிமுக 3, காங்கிரஸ் 1, மதிமுக 1, சுயேச்சை 2 இடங்களிலும், வி.கே.புரம் நகராட்சியில் 21 வார்டுகளில் திமுக 13, அதிமுக 3, காங்கிரஸ் 1, சுயேச்சை 4 இடங்களிலும், களக்காடு நகராட்சியில் 27 வார்டுகளில் திமுக 10, அதிமுக 6, சுயேச்சை 11 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது.

மாவட்டத்திலுள்ள 17 பேரூராட்சிகளிலும் திசையன்விளை, ஏர்வாடி பேரூராட்சிகளை தவிர மற்ற பேரூராட்சிகளில் திமுகவே அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திசையன்விளையில் அதிமுகவும், ஏர்வாடியில் சுயேச்சைகளும் அதிகளவில் வெற்றி பெற்றுள்ளனர். 17 பேரூராட்சிகளிலும் மொத்தமுள்ள 273 வார்டுகளில் 9 வார்டுகளுக்கு போட்டியின்றி கவுன்சிலர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். மீதமுள்ள 264 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் திமுக 152, சுயேச்சைகள் 57, அதிமுக 45, காங்கிரஸ் 9, பாஜக 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3, தேமுதிக 1 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் உள்ள 17 பேரூராட்சிகளில் 260 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில் திமுக 117 வார்டுகளிலும், அதிமுக 53 வார்டுகளிலும், காங்கிரஸ் 9 வார்டுகளிலும், அமமுக 5 வார்டுகளிலும், மதிமுக, பாஜக தலா 4 வார்டுகளிலும், இந்திய

கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேமுதிக தலா 2 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், நாம் தமிழர் கட்சி, புதியதமிழகம், எஸ்டிபிஐ தலா ஒரு வார்டிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 58 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள 6 நகராட்சிகளில் 180 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இவற்றில் திமுக 65 வார்டுகளிலும்,

அதிமுக 40 வார்டுகளிலும், காங்கிரஸ் 19 வார்டுகளிலும், பாஜக 12 வார்டுகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 9 வார்டுகளிலும், மதிமுக 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி, எஸ்டிபிஐ தலா 2 வார்டுகளிலும், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, சமக, அமமுக, புதிய தமிழகம் தலா ஒரு வார்டிலும், சுயேச்சைகள் 22 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். மக்கள் நீதி மய்யம் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, 2 நகராட் சிகள் மற்றும் 12 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியது.

தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி, திருச்செந்தூர், காயல்பட்டினம் ஆகிய மூன்று நகராட்சிகள், 17 பேரூராட்சிகளில் உள்ள 396 வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

இதில் தூத்துக்குடி மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் திமுக கூட்டணி 50 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் வென்றுள்ளனர்.

திமுக தனிப்பெரும்பான்மை பலத்துடன் தூத்துக்குடி மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக சார்பில் 20-வது வார்டில் வென்ற அமைச்சர் கீதாஜீவனின் சகோதரர் ஜெகன் பெரியசாமி மேயராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாவட்டத்தில் உள்ள மூன்று நகராட்சிகளில் கோவில்பட்டி மற்றும் திருச்செந்தூர் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது. காயல்பட்டினம் நகராட்சியில் சுயேச்சைகள் அதிகளவில் வென்றுள்ளனர்.

மாவட்டத்தில் மொத்தமுள்ள 17 பேரூராட்சிகளில் 12 பேரூராட்சிகளை திமுக கைப்பற்றியுள்ளது. ஒரே ஒரு பேரூராட்சியை மட்டும் அதிமுக வென்றுள்ளது. 4 பேரூராட்சிகளில் இழுபறி நிலை காணப்படுகிறது. இந்த இடங்களிலும் சுயேச்சைகளின் ஆதரவோடு தலைவர் பதவிகளை பிடிக்க திமுக முயன்று வருகிறது.

கன்னியாகுமரி

நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 52 வார்டுகளில் 32-ஐ திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 வார்டில் வெற்றி பெற்றுள்ளன. பாஜக 11 வார்டுகளில் வெற்றி பெற்று 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதிமுக 7 வார்டுகளிலும், சுயேச்சைகள் 2 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றுகிறது.

இம்மாவட்டத்தில் குளச்சல், கொல்லங் கோடு, பத்மநாபபுரம், குழித்துறை ஆகிய 4 நகராட்சிகளில் மொத்தம் 99 வார்டுகள் உள்ளன. திமுக 33 வார்டுகளிலும், பாஜக 21, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 15, காங்கிரஸ் 12, சுயேச்சைகள் 13, அதிமுக 2, பாமக, ஜனதா தளம், தேமுதிக ஆகியவை தலா 1 வார்டிலும் வென்றுள்ளன.

குளச்சல் நகராட்சியில் திமுக கூட்டணியினர் 13, அதிமுக 1, பாஜக 4, மற்றவை 6 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். தலைவர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது.

பத்மநாபபுரம்

பத்மநாபபுரம் நகராட்சியில் பாஜக, திமுக தலா 7 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் தலைவர் பதவியை வசமாக்க சுயேச்சைகளின் ஆதரவை திரட்டி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 51 பேரூராட்சிகளில் 828 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

இதில் 4 பேர் போட்டியின்றி தேர்வு செயயப்பட்டனர். எஞ்சியுள்ள 824 இடங்களில் திமுக 229 வார்டுகளில் வெற்றி பெற்றது. பாஜக 168, காங்கிரஸ் 163, அதிமுக 64, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 42 இடங்களைப் பிடித்தன. இதர கட்சிகள் 3, சுயேச்சைகள் 155 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x